முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு எதிரொலி: எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

திங்கட்கிழமை, 15 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், டெல்லியில் எண்ணெய் நிறுவன தலைமைச் செயல் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். அதில் உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அமெரிக்கா எச்சரிக்கை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருவதால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயுவின் விலை தொடர்ந்து கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன்காரணமாக நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் நவம்பர் 4-ம் தேதிக்கு பிறகு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்யக்கூடாது என அமெரிக்கா எச்சரித்து உள்ளது.

பிரதமர் ஆலோசனை

இதுபோன்ற நெருக்கடியான சூழலை சமாளிக்க பிரதமர் மோடி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் எண்ணெய், எரிவாயு ஆய்வில் ஈடுபடுவதற்கும், இவற்றின் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக முதலீடுகளை ஈர்ப்பதற்கும் பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று டெல்லியில் தொடங்கியது. இதில் சவுதி அரேபியாவின் எண்ணெய் இலாகா அமைச்சர் அல் பாலிஹ், ஆஸ்திரேலியாவின் பி.பி. எண்ணெய் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பாப் டுத்லே, டோட்டல் நிறுவன தலைவர் பாட்ரிக் பவ்யானே, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, வேதாந்தா நிறுவன தலைவர் அனில் அகர்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பெட்ரோலியத்துறை அமைச்சர்  தர்மேந்திர பிரதான்,  நிதி ஆயோக் துணைத்தலைவர்  ராஜீவ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

3-வது ஆலோசனை...

இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் பெட்ரோல், டீசல், எரிவாயுவின் விலையைக் கட்டுப்படுத்துவது, இவற்றின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது, எண்ணெய் துறையில் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக முதலீடுகளை ஈர்ப்பது, முதலீடுகளுக்கான விதிமுறைகளை எளிதாக்குவது, ஆழ்கடலில் எண்ணெய் வள ஆய்வு, ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை ஆகியவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளில் பிரதமர் மோடி எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் நடத்தும் 3-வது ஆலோசனை கூட்டம் இதுவாகும். இந்த ஆலோசனை கூட்டத்துக்கு நிதி ஆயோக் ஏற்பாடு செய்தது.

தமிழக அரசு நடவடிக்கை

இதற்கிடையே பெட்ரோல், டீசல் அளவு குறைவாக விநியோகிக்கும் நிலையங்கள் மீது கடும் எச்சரிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தொழிலாளர் துறை சார்பில் கூறியிருப்பதாவது., தமிழகத்தில் பெட்ரோல், டீசல் அளவு குறைவாக விநியோகித்த 127 பெட்ரோல் நிலைய நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் 34 நிறுவனங்கள், கோவையில் 24 நிறுவனங்கள், திருச்சியில் 30 நிறுவனங்கள், மதுரையில் 39 நிறுவனங்கள் என மொத்தம் 127 பெட்ரோல் நிலையங்கள் மீது நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புகார்களை தெரிவிக்கலாம்

எரிபொருள் நிரப்பும் போது பெட்ரோல், டீசல் பம்புகளில் பூஜ்ஜியத்தில் இருப்பதை நுகர்வோர் உறுதி செய்ய வேண்டும்.  பெட்ரோல், டீசல் அளவு குறைவாக விநியோகிக்கும் நிலையங்கள் மீதான புகார்களை TN-LMCTS என்ற கைப்பேசி செயலி மூலம் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து