முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அமைச்சர் அக்பர் விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்? ராகுல் காந்தி கேள்வி

புதன்கிழமை, 17 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

போபால் : மத்திய மந்திரி எம்.ஜே.அக்பருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் மோடி மவுனம் காப்பது ஏன் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய பிரதேச மாநிலம் ஜோரா, சியோபூர் ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அங்கு நடந்த பொதுக்கூட்டங்களில் ராகுல் காந்தி பேசியதாவது:-

பிரதமர் மவுனம் ஏன்?

பிரதமர் மோடி பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கல்வி போதிப்போம் என்று தெரிவிக்கிறார். அதே நேரத்தில் மத்திய மந்திரி எம்.ஜே.அக்பருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் மோடி மவுனம் காப்பது ஏன் என்று தெரியவில்லை. உத்தரபிதேசத்தில் ஒரு பெண்ணை பா.ஜனதா எம்.எல்.ஏ. பாலியல் வன்கொடுமை செய்த போது அந்த மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மவுனம் காத்தார். இந்த விவகாரத்தில் மோடியும் மவுனம் காத்தார். எனவே பா.ஜனதா மந்திரி, எம்.எல்.ஏ.விடம் இருந்து நமது பெண் குழந்தைகளை காப்போம் என்று புதிய கோ‌ஷம் எழுப்புவோம்.

பொய் சொல்ல மாட்டேன்

இந்தியாவின் பாதுகாவலராக இருக்க விரும்புவதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால் அவர் தொழில் அதிபர்கள் அனில் அம்பானி, மெகுல் கோச்சி, நீரவ் மோடி ஆகியோரின் உண்மையான பாதுகாவலர் என்பதை உறுதி செய்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக அவர்களுக்காகவே மோடி பணியாற்றினார். நாட்டில் பெட்ரோல் விலை மிக கடுமையாக அதிகரித்துள்ளது. வரிகளின் மூலம் மக்களின் பணத்தை அவர்கள் எடுக்கின்றனர். அந்த பணத்தை 20 தொழில் அதிபர்களுக்கு அளிக்கின்றனர். நான் பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதற்கு இங்கு வரவில்லை. நான் பொய் சொல்ல மாட்டேன். உண்மையான வாக்குறுதிகளை மட்டுமே அளிப்பேன். அதை செயல்படுத்துவேன். ஊட்டச்சத்து குறைபாடு, விவசாயிகள் பிரச்சினை, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றால் மத்திய பிரதேசம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவில்லை. ஆனால் பா.ஜனதா அரசு தன்னை விளம்பரப்படுத்தும் பணியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

மத்திய பிரதேசததில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் ஒரு வாய்ப்பு தர வேண்டும். மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும். விவசாய நிலங்கள் அருகே உணவு பதப்படுத்துதல் ஆலைகள் அமைக்கப்படும். காங்கிரஸ் சார்பில் முதல்வராக பதவி ஏற்பவர் தினமும் 18 மணி நேரம் இளைஞர் நலப்பணியில் ஈடுபடுவார். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து