முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை சிறையில் உள்ள 16 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு , முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

புதன்கிழமை, 17 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : அபராதமோ, சிறைத் தண்டனையோ விதிக்கப்படாமல் இலங்கை சிறையில் உள்ள 16 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு , முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி நேற்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி மீனவர்கள்

மன்னார் வளைகுடா பகுதியில் தங்களது வாழ்வாதாரத்துக்காக மீன்பிடிக்கச் சென்ற நமது மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர் அந்த நாட்டின் நீதிமன்றத்தில் மீனவர்களை ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் மீனவர்களுக்கு அபராதம் விதித்துள்ளதாக வந்த தகவலால் ஆழ்ந்த கவலை அடைந்து இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து எட்டு இந்திய மீனவர்கள் தங்களது படகு மூலமாக கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதியன்று மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். வெளிநாட்டுப் படகுகளை ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அபராதம் - சிறை தண்டனை

வெளிநாட்டுப் படகுகளை ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டத்தின் கீழ், இலங்கை கடற்படையில் சட்டவிரோதமாக மீன்பிடிக்கும் மீனவர்கள் மீது தலா ஒருவருக்கு ரூ. 26 லட்சம் (இந்திய ரூபாய் மதிப்பு) வரை அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதத் தொகையை செலுத்தத் தவறினால், மீனவர்கள் 3 மாதங்கள் வரை சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மிகப்பெரிய பீதி...

இந்திய மீனவர்கள் குறிப்பாக தமிழக மீனவர்களின் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இலங்கையின் மீனவர்கள் மற்றும் கடல்சார் வளச் சட்டம் 1996-ல் திருத்தங்கள் செய்யப்பட்டன. இந்தப் பிரச்சினை குறித்து கடந்த ஆண்டு ஜூலை 7-ம் தேதியன்றும், அதற்குப் பிறகும் தங்களுக்கு எழுதப்பட்ட கடிதங்கள் என் வசம் உள்ளன. இலங்கை அரசால் திருத்தப்பட்ட சட்டப் பிரிவுகள் தமிழக மீனவர்கள் மீது இப்போது பிரயோகப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை - இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகளை ஏற்படுத்தும் வகையிலான இந்திய அரசின் சாதகமான நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு துணை நின்று வருகிறது. இந்த முக்கியமான தருணத்தில் உணர்ச்சிப்பூர்வமான பிரச்சினையில் இந்திய அரசு எடுத்து வரும் தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை கேலிக்கூத்தாக்கும் வகையில் இப்போது இலங்கை அரசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இலங்கையின் இந்த நடவடிக்கைகளால் தமிழக மீனவர்களின் மனதில் மிகப்பெரிய பீதி ஏற்பட்டுள்ளது.

நடவடிக்கை எடுங்கள்...

இந்தப் பிரச்சினை தொடர்பாக, இலங்கைக்கு கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்ய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும். மேலும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள நமது மீனவர்களுக்கு எந்தவித அபராதமோ அல்லது சிறைத் தண்டனையோ விதிக்காத வகையில் இலங்கை நீதிமன்றங்களில் சிறப்பாக வாதிட வேண்டும். இலங்கைச் சிறைகளில் உள்ள மொத்தம் 16 இந்திய மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் தாங்கள் உடனடியாகத் தலையிட்டு தீர்வு காண வேண்டும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து