அ.தி.மு.க. ஆட்சியில் எந்த உறவினருக்கும் டெண்டர் விடப்படவில்லை: என் மீது தி.மு.க. அளித்த புகார் முழுக்க, முழுக்க பொய்யானது - உளுந்தூர்பேட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

புதன்கிழமை, 17 அக்டோபர் 2018      தமிழகம்
cm edapadi1 2018 10 17

மதுரை : அ.தி.மு.க. ஆட்சியில் எந்த உறவினருக்கும் டெண்டர் விடப்படவில்லை, என் மீது தி.மு.க. அளித்த புகார் முழுக்க, முழுக்க பொய்யானது என்று விழுப்புரம், உளுந்தூர்பேட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

47-வது ஆண்டு...

அ.தி.மு.க. என்ற பேரியக்கம் தொடங்கப்பட்டு 46 ஆண்டுகள் முடிந்து நேற்று 47-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தொடர் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர் செல்வமும் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. 47-வது துவக்க விழா கூட்டங்கள் நடைபெற்றன. உளுந்தூர் பேட்டையில் நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர்,

சந்திக்க தயார்...

டெண்டர் முறைகேடு என்று தி.மு.க. தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் என்னை குற்றவாளி என்று சொல்லவில்லை. எனவே தி.மு.க. எத்தனை வழக்கு தொடுத்தாலும் அவற்றை சந்திக்க நான் தயார் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி சவால் விட்டார். மேலும் தி.மு.க. ஒரு கட்சியே அல்ல என்றும், அது ஒரு கம்பெனி என்றும் முதல்வர் கிண்டலாக கூறினார். அ.தி.மு.க.வில் தொண்டர்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்த்தவர் அம்மா. அம்மா இருக்கும் போதே அண்ணன் ஓ.பி.எஸ். முதல்வராகி இருக்கிறார். ஆனால் தி.மு.க. வில் கருணாநிதி உயிரோடு இருந்தவரையில் ஸ்டாலினுக்கு பதவிகள் தரப்படவில்லை.

பதவி தரவில்லை...

செயல் தலைவர் பதவிதான் கொடுக்கப்பட்டது. அவர் செயல்படாத தலைவர். அது வேறு விஷயம். ஆனாலும் கருணாநிதியே தன் மகனுக்கு தலைவர் பதவி தரவில்லை என்று முதல்வர் தெரிவித்தார். பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும். இருப்பினும் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது குறித்து தமிழக அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிசீலிப்போம். மீனவர்கள் சிறைப்பிடிப்பு விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.

நடக்கவில்லை...

ஆட்சியை கலைக்க வேண்டும் என்று திட்டம் போட்டார்கள். கட்சியை  உடைக்க திட்டம் போட்டார்கள். ஆனால் எதுவுமே ம. ஒரு வாரத்தில் கலைந்து விடும். இரு வாரத்தில் கலைந்து விடும் என்றார்கள். ஆனால் 18 மாதங்களாகி விட்டன. இந்த ஆட்சி நல்ல முறையில் போய்க் கொண்டிருக்கிறது. எனவே தி.மு.க.வின் கனவு எப்போதும் பகல் கனவு தான் என்று கூறிய முதல்வர் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை பட்டியலிட்டார். 54 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஓட்டு போட்டாலே கோடிக்கணக்கில் வாக்கு விழும் என்று கூறிய முதல்வர் திருமண நிதியுதவி திட்டத்தையும் குறிப்பிட்டார்.

திரளான வரவேற்பு

ஏழை பெண்களுக்கு 4 கிராம் என்று இருந்ததை ஒரு பவுனாக்கியவர் அம்மா என்று குறிப்பிட்ட முதல்வர் பெண்களுக்கான மகப்பேறு நிதியுதவி மற்றும் அரசின் பல்வேறு திட்டங்களையும் பட்டியலிட்டார். முன்னதாக உளுந்தூர்பேட்டை சென்ற அவருக்கு அ.தி.மு.க.வினரும் பொதுமக்களும் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். உளுந்தூர் பேட்டை நகரமே களைகட்டி காணப்பட்டது. 

முதல்வர் பேட்டி...

கூட்டத்திற்கு பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், அ.தி.மு.க. ஆட்சியில் டெண்டர் விடப்பட்டதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. உலக வங்கியின் விதியன் படியே டெண்டர் விடப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் எந்த உறவினருக்கும் டெண்டர் விடப்படவில்லை. அது எப்படி ஊழலாகும்.  தி.மு.க. ஆட்சியில்தான் ராமலிங்கம் என்பவருக்கு 10 டெண்டர்கள் கொடுக்கப்பட்டது. என் மீது தி.மு.க. வை சேர்ந்த ஆர்.எஸ். பாரதி அளித்த புகார் முழுக்க, முழுக்க பொய்யானது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து