முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போடியில் கன மழைக்கு 8 வீடுகளின் சுவர்கள் இடிந்து சேதம்: பெரிய மரக்கிளை விழுந்து போக்குவரத்து பாதிப்பு

வெள்ளிக்கிழமை, 19 அக்டோபர் 2018      தேனி
Image Unavailable

போடி,-     போடி பகுதியில் பெய்த கனமழையால் கிராமங்களில் 8 வீடுகளின் சுவர்கள் இடிந்து சேதமடைந்தன. போடி நகரில் மரக்கிளை உடைந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேவாரத்தில் வெள்ள நீர் புகுந்ததால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
     போடி பகுதியில் வியாழன் கிழமை நள்ளிரவு லேசான சாரல் மழையாக தொடங்கியது வெள்ளிக்கிழமை அதிகாலையில் கன மழையாக பெய்தது. காலை 7 மணி வரை தொடர்ந்து மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது. போடி கிராமங்களில் ஓடைகளில் தண்ணீர் பெருக்கு ஏற்பட்டது.
     போடி அருகே சூலப்புரம் மேற்கு பகுதியில் உள்ள கண்மாய் கரையில் விரிசல் ஏற்பட்டு கண்மாய் தண்ணீர் கிராமத்திற்குள் புகுந்தது. இதில் சூலப்புரத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரது வீட்டின் மூன்று சுவர்கள் இடிந்து சேதமடைந்தன. இதேபோல் ரவிக்கண்ணன், போத்திக்காளன், ஒண்டிவீரன் ஆகியோரின் வீட்டுச் சுவர்களும் இடிந்து விழுந்து சேதம் ஏற்பட்டது. சுவர்கள் வெளிப்புறமாக விழுந்ததால் வீட்டில் தூங்கியவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.
    இதேபோல் ராசிங்காபுரம் அருகே கரையான்பட்டி கிராமத்தில் காஜாமைதீன், சின்னம்மாள், நாகமலை ஆகியோரன் வீட்டுச் சுவர்கள் இடிந்து விழுந்து சேதம் ஏற்பட்டது. குடியிருப்பு பகுதியில் தண்ணீரும் புகுந்தது. போடி சில்லமரத்துப்பட்டி காந்திஜி தெருவில் பாண்டியன் என்பவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது.
     இதனிடையே போடியில் பகலிலும் கனமழை கொட்டியது. இதில் போடி நகர் காவல் நிலையம் அருகே ஒரு வீட்டின் முன் பகுதியில் இருந்த வேப்பமரத்தின் பெரிய கிளை பாரம் தாங்காமல் உடைந்து போக்குவரத்து மிக்க சாலையில் விழுந்தது. இதில் மரத்திற்கு கீழ் வியாபாரம் செய்து கொண்டிருந்த பெட்டிக்கடைக் காரர்கள் தப்பித்தனர்.
     போடியை அடுத்த தேவாரம் பகுதியில் பெய்த கன மழையினால் பிரம்பு வெட்டி ஓடை, பிள்ளையார் ஊத்து ஓடையிலும் வெள்ள நீர் ஓடியது. இதில் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் சூழ்ந்தது. இதனையடுத்து வருவாய்த்துறையினர், காவல்துறையினர், தீயணைப்பு தூறையினர் அங்கு மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
    இதேபோல் போடியை அடுத்த எரணம்பட்டி, முத்தையன்செட்டிபட்டி ஆகிய கிராமங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனையடுத்து அருகில் உள்ள கிராம மக்கள் அங்கு சென்று மீட்பு பணிகளில் உதவினர். இதனிடையே சூலப்புரத்திற்கு மேற்கு பக்கம் குதுவல் கண்மாயில் பெரிய உடைப்பு ஏற்படும் சூழல் உள்ளதால் அதனை தடுக்க மாவட்ட நிர்வாகத்தினர் அங்கு முகாமிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து