முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சசிகலாவுடன் நட்பு வைத்திராவிட்டால் அம்மா இன்னும் உயிரோடு இருந்திருப்பார் முன்னாள் அமைச்சர் இரா.விசுவநாதன் பேச்சு

வெள்ளிக்கிழமை, 19 அக்டோபர் 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - சசிகலாவோடு நட்பு வைத்திருக்கா விட்டால் அம்மா இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருந்திருப்பார் என்று சின்னாளபட்டியில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் பேசினார்.
அ.தி.மு.க. வின் 47ம் ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்தின் சார்பில் சின்னாளபட்டியில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பி.கே.டி.நடராஜன் தலைமை வகித்தார். திண்டுக்கல் எம்.பி. உதயகுமார், மாவட்ட கழக செயலாளர் மருதராஜ், ஆத்தூர் ஒன்றிய முன்னாள் சேர்மன் கோபி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் முப்பெருந்துறை அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையில்.
பேரறிஞர் அண்ணாவால் தனது வாரிசு என்று அடையாளம் காணப்பட்டவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர் தமிழக மக்கள் நலனுக்காக தொடங்கிய இயக்கம் தான் அ.தி.மு.க. அவரது மறைவுக்குப் பின் இந்த இயக்கத்தை மறைந்த நமது முதல்வர் அம்மா ஆலமர விருட்சம் போல் வளர்த்து காத்து வந்தார். இவர்கள் இருவரும் ஒருபோதும் குடும்ப ஆட்சிக்கு வழிவகுக்கவில்லை. மக்கள் நலனுக்காக தொடங்கப்பட்ட இந்த இயக்கம் தனது மறைவுக்குப் பின்னரும் 100 ஆண்டுகள் மக்கள் இயக்கமாகவே இருக்கும் என்று ஜெயலலிதா சட்டமன்றத்தில் தெரிவித்தார். அவரது கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் அம்மாவால் அடையாளம் காணப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை துணை ஒருங்கிணைப்பாளராகவும் கொண்டு அ.தி.மு.க. மாபெரும் இயக்கமாக தொண்டர்களுடன் வெற்றி நடை போட்டு வருகிறது.
சசிகலா என்ற தீய சக்தியோடு அம்மா நட்பு வைத்திருக்காவிட்டால் அவர் இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருந்திருப்பார். அம்மாவிற்கு செய்த துரோகத்திற்காகத் தான் தற்போது தண்டனையை அனுபவித்து வருகிறார். தி.மு.க.வில் செயல் தலைவராக இருந்து தற்போது தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினால் எதையும் சாதிக்க முடியாது. அவருக்கு தலைவராகும் தகுதி இலர்லை. ஸ்டாலினுக்கு கொடுத்த தலைவர் பதவியை துரைமுருகனுக்கோ, ஐ.பெரியசாமிக்கோ கொடுத்திருக்கலாம் என்று பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைக்கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து