முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூச்சி மருந்தில், அரிசி பேரத்தில், வீராணம் திட்டத்தில் ஊழல்: ஊழல் என்றாலே தி.மு.க.தான் - தி.மு.க. என்றாலே ஊழல்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கு

ஞாயிற்றுக்கிழமை, 21 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சேலம் : ஊழல் என்று சொன்னாலே தி.மு.க.தான். தி.மு.க. என்றாலே ஊழல்தான் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீரபாண்டியில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார்.
சேலம் மாவட்டம் வீரபாண்டியில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது, 

மருத்துவத் துறையிலே தமிழகம் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கின்றது. அரசு சார்பில் பல்வேறு மருத்துவமனைகள் துவக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.  சேலத்தில் கூட, மகப்பேறு மருத்துவமனை துவக்கியிருக்கிறோம், அது பச்சிளங் குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை முகாம் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறோம். தாய்மார்கள் பிரசவத்திற்கு தனியார் மருத்துவமனைக்கு சென்றால் அதிக செலவாகும், எனவே அவர்களுக்காக சேலம் அரசு மருத்துவமனையில் நவீன முறையில் மகப்பேறு மருத்துவமனை அம்மா கட்டிக் கொடுத்து விட்டு சென்றிருக்கிறார். அதிகமாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் அம்மாவினுடைய ஆட்சியில்தான் துவக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு அரசு மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.  ஸ்டான்லி மருத்துவமனையில் இரண்டு கையும் இல்லாத ஒருவருக்கு, இறந்தவரின் உடலிலிருந்து இரண்டு கைகளையும் எடுத்து பொருத்தப்பட்டிருக்கிறது.  இந்தியாவிலேயே வேறு எந்த மருத்துவமனையிலும் இதுபோன்று செய்தது கிடையாது.

பிரசவ காலத்தில் தாய்மார்களின் இறப்பு குறைக்கப்பட்டிருக்கின்றது, பிறக்கின்ற குழந்தைகளின் இறப்பு குறைக்கப்பட்டிருக்கின்றது.  கருவிலே வளர்கின்ற குழந்தை நலமாக வாழவேண்டும் என்பதற்காக கருவுற்ற தாய்மார்களுக்கு 18000 ஆக அம்மா அரசு கொடுத்துக் கொண்டிருக்கிறது. வேளாண்மைத் துறையில் தொடர்ந்து க்ரிஷ் கர்மாண் விருதை பெற்றுக் கொண்டிருக்கின்றோம். நீர் மேலாண்மைப் படுத்தவேண்டும் என்பதற்காக எங்கெங்கெல்லாம் நீர் கிடைக்கின்றதோ அதையெல்லாம் சேமித்து வைத்து நிலத்தடி நீரை உயரச் செய்வதற்காக ஒடை மற்றும் நதிகளிலே தடுப்பணை கட்டுவதற்கு தனியாக ஒரு அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறோம்.  எங்கெங்கெல்லாம் குடிநீர் பிரச்சினை இருக்கின்றதோ, அதையெல்லாம் ஆய்வு செய்து, அவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கக்கூடிய சூழ்நிலையை நாம் உருவாக்கியிருக்கின்றோம்.  அதன் அடிப்படையிலே, நம்முடைய வீரபாண்டிக்கு கூட ஒரு கூட்டுக்குடிநீர் திட்டத்தை புதிதாக உருவாக்கியிருக்கின்றோம். அந்தத் திட்டம் நிறைவேறுகின்ற பொழுது, வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அத்தனை மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட காவிரி தண்ணீர் வழங்குவதற்கு அம்மாவினுடைய அரசால் நடவடிக்கை எடுக்கப்படும், அதற்காக புதிய திட்டத்தை அம்மாவினுடைய அரசு உருவாக்க இருக்கின்றது.

குடிமராமத்து திட்டத்தின் மூலமாக, முதல்கட்டமாக, 100 கோடி ஒதுக்கி 1519 ஏரிகளை தூர்வாருவதை பரிட்சார்த்த முறையில் மேற்கொண்டோம். ஆங்காங்கே ஏரிகள் குளங்களில் இருக்கின்ற வண்டல்மண்ணை விவசாயத்திற்கு எருவாக பயன்படுத்துவதற்காக இலவசமாக அம்மாவின் அரசு தருகின்றது.  இதனால் ஏரிகள், குளங்கள் ஆழமாகின்றது.  பருவகாலங்களில் பெய்கின்ற மழைநீர் ஏரிகள், குளங்களில் அதிக அளவில் சேமித்து வைத்து, நிலத்தடி நீர் உயர்வதற்கு அம்மாவினுடைய அரசு செயல்படுத்திய திட்டம் குடிமராமத்து திட்டம். மேலும் விவசாயிகள் இந்த திட்டத்தை நீட்டிக்க வேண்டுமென்று அளித்த கோரிக்கையை ஏற்று, இரண்டாம் கட்டமாக 328 கோடியில் 1511 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு, படிப்படியாக தமிழகத்தில் இருக்கும் ஏரிகள், குளங்கள் தூர்வாரப்படும். 

எப்பொழுது பார்த்தாலும் எதிர்க்கட்சித்தலைவர், தி.மு.க.-வின் தலைவர் ஸ்டாலின் ஊழல், ஊழல் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார். ஊழல் என்று சொன்னாலே தி.மு.க., தி.மு.க. என்றாலே ஊழல், அதற்கென்றே துவங்கப்பட்ட கட்சிதான் தி.மு.க. ஏற்கனவே, சர்க்காரியா கமிஷன் தீர்ப்பு சொல்லியிருக்கிறது, விஞ்ஞான முறையில் ஊழல் செய்கின்ற ஒரு அரசு திராவிட முன்னேற்றக் கழக அரசுதான் என்று ஏற்கனவே சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றது. பூச்சி மருந்திலே ஊழல், அரிசி பேர ஊழல், வீராணம் ஊழல், வீராணம் கூட்டுக்குடிநீர் திட்டம், அந்தப் பைப்பில் குடியிருந்து கொண்டிருக்கிறார்கள்.  தி.மு.க. ஆட்சியிலே நடைபெற்ற ஊழலுக்கு இந்த பைப்பே சான்று. திருக்கழுக்குன்றத்தில், வீராணத்தில் தி.மு.க. ஆட்சியில் தயார் செய்யப்பட்ட கிட்டத்தட்ட 1000 பைப் அப்படியே கிடக்கிறது.  அந்த வீராண ஊழலில் டெண்டர் எடுத்த சத்யநாராயணன் இறந்தே போய் விட்டார்.  ஆகவே, உங்களுடைய ஆட்சியில் மிகப் பெரிய ஊழல் நடைபெற்றது. அந்த ஊழலால் மக்கள் கடுமையான பாதிப்பிற்குள்ளாகினார்கள். இந்தக் கூட்டுக்குடிநீர் பாதிக்கப்பட்ட காரணத்தினாலே, சென்னைக்கு வர வேண்டிய குடிநீர் கிடைக்கவில்லை.  கருணாநிதி கொண்டு வந்த வீராணம் திட்டம் ஊழல் நிறைந்த திட்டமாக ஆனதால், அந்தத் திட்டம் இடையிலே நிறுத்தப்பட்டது. ஆகவே, அம்மா, புதிய வீராணம் திட்டம் என்ற ஒரு திட்டத்தைக் கொண்டு வந்து,  இன்றைக்கு சென்னை மாவட்ட மக்களுக்கு தங்குதடையில்லாமல் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கிக் கொண்டிருக்கின்ற காட்சியை அம்மாவினுடைய ஆட்சியில்தான் பார்க்க முடியும்.

இன்றைக்கு உச்சநீதிமன்றம் அளித்த கருத்தில் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர்கள் மீது ஏதாவது வழக்கு இருந்தால், அந்த வழக்கை தனி நீதிமன்றம் அமைத்து  விசாரிக்க வேண்டுமென்று உத்தரவிட்டு, தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு விட்டது. முதன்முதலில் விசாரணை, ஸ்டாலின் மீதுதான் வந்தது.  இன்றைக்கு, தி.மு.க.-வில்தான் கிட்டத்திட்ட 10, 11 அமைச்சர்கள் மீது வழக்குகள் இருக்கிறது.  அத்தனை வழக்குகளையும் இந்த தனி நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ள இருக்கின்றது, அப்படி வருகின்ற பொழுது நிச்சயம் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். எங்கள் மீது வேண்டுமென்றே குறை சொல்வதற்குக் காரணம், இங்கே இருக்கின்ற வழக்குகளெல்லாம் அங்கே போகப் போகிறது.  அப்பொழுது தினந்தோறும் பத்திரிகையில் வரும், தி.மு.க.-விற்கு கெட்ட பெயர் ஏற்பட்டுவிடும். அந்த கெட்ட பெயர் ஏற்படக்கூடாது என்பதற்காக, எங்கள் மீது பழி சுமத்திக் கொண்டிருக்கிறார்கள்.  எந்த ஊழலும் செய்யாத அம்மாவின் அரசு மீது, பல்வேறு துறைகள் மீது இன்றைக்கு ஊழல் குற்றச்சாட்டு சொல்வதற்குக் காரணம், தி.மு.க. ஆட்சி இருந்தபொழுது அவர்களுடைய அமைச்சர்களெல்லாம், பல்வேறு தவறு செய்த காரணத்தினால் அவர்கள் மீது ஆங்காங்கே நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அத்தனை வழக்குகளும், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, புதிதாக அமைக்கப்பட்டுள்ள அந்த நீதிமன்றத்தில் மாறுகின்றபொழுது, அந்த வழக்குகளெல்லாம் நடைபெறும், அப்பொழுது என்ன தீர்ப்பு வரும் என்பதை எண்ணித்தான், நம் மீது தவறான குற்றச்சாட்டை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரைக்கும் பல்வேறு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கையின் அடிப்படையில், அரியானூரில் 45 கோடி ரூபாயில் உயர்மட்டப் பாலம் கட்டுவதற்கு டெண்டர் அறிவிக்கப்பட்டு விட்டது.  மகுடஞ்சாவடியில் தேசிய நெடுஞ்சாலை இருக்கின்ற காரணத்தினாலே விபத்து ஏற்படாமல் தடுக்க, அங்கே  உயர்மட்டப் பாலம் கட்டவேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் அங்கே ஒரு உயர்மட்டப் பாலம் கட்டுவதற்கு அம்மாவினுடைய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  இது உங்களுடைய அரசு, இது மக்களுடைய அரசு, மக்களின் தேவைகளை செய்கின்ற அரசு அம்மாவினுடைய அரசு.  இன்றைக்கு ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களுடைய முன்னேற்றம் ஒன்றுதான் அம்மாவினுடைய அரசின் லட்சியம்.  இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து