முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

ஞாயிற்றுக்கிழமை, 21 அக்டோபர் 2018      விளையாட்டு
Image Unavailable

ஓமன்,ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் ஓமன் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் ஓமன் அணியை 11-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இமாலய வெற்றி கண்டது. இந்நிலையில், இந்திய அணி தனது 2-ஆவது போட்டியில் நேற்று முன்தினம் பாகிஸ்தானை எதிர்கொண்டது. போட்டியின் முதல் நிமிடத்திலேயே பாகிஸ்தான் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திய அந்நாட்டு வீரர் முகமது இர்பான் போட்டியின் முதல் கோலை அடித்தார். இதனால், இந்திய அணி சற்று நெருக்கடிக்கு உள்ளானது. அதன்பிறகு, போட்டியின் முதல் கால்பகுதி ஆட்டத்தில் இந்திய அணியால் பதில் கோல் அடிக்க முடியவில்லை. இதனால், பாகிஸ்தான் அணி 1-0 என முன்னிலை வகித்து வந்தது.

இதையடுத்து, இந்திய அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் 24-வது நிமிடத்தில் இந்திய அணிக்காக முதல் கோலை அடித்தார். இதனால், முதல்பாதி ஆட்டநேர முடிவில் இருஅணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில், 33-வது நிமிடத்தின் போது மன்தீப் சிங் இந்திய அணிக்காக 2-வது கோலை அடித்து முன்னிலை பெறச் செய்தார். அதே முனைப்புடன், போட்டியின் 42-வது நிமிடத்தில் இந்திய வீரர் தில்பிரீத் சிங் ஒரு கோல் அடிக்க இந்திய அணி 3-1 என வலுவான முன்னிலை பெற்றது. இதனால், 3-வது கால்பகுதி ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 3-1 என முன்னிலை வகித்தது.
இதைத்தொடர்ந்து, கடைசி கால்பகுதி ஆட்டத்தில் இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இருப்பினும், இரு அணிகளின் தடுப்பாட்டம் நன்றாக இருந்ததால் போட்டியில் மேற்கொண்டு கோல் எண்ணிக்கை உயரவில்லை. இதன்மூலம், போட்டியின் முடிவில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி தனது அடுத்த போட்டியில் நேற்று ஜப்பானை எதிர்கொண்டது. பாகிஸ்தான் அணி தனது அடுத்த போட்டியில் இன்று ஓமனை எதிர்கொள்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து