முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டதாக கூறி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் எச். ராஜா வழக்கை முடித்து வைத்தது ஐகோர்ட்

திங்கட்கிழமை, 22 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,அவதூறு வழக்கில் ஆஜராகி, நீதிமன்றங்கள் குறித்து உணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டதாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் எச்.ராஜா. இதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மெய்யபுரத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த திருமயம் போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து போலீசாரின் ஆலோசனையுடன் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த ஐகோர்ட் மதுரை கிளை அனுமதி அளித்தது. அதன்படி, மெய்யபுரத்தில் உள்ள மகாமாரியம்மன் கோயிலில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து, பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமையில் விநாயகர் ஊர்வலம் தொடங்கியது.அப்போது, பொன்னமராவதி டி.எஸ்.பி. தமிழ்மாறன், திருமயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் உள்ளிட்டோர் தேவாலயம் வழியே ஊர்வலம் சென்றால் சட்டம் ஒழுங்கு பாதிக்கக் கூடும் என்பதால், வேறு வழியாக ஊர்வலம் நடத்துமாறு கேட்டுக் கொண்டனர். இதை மறுத்த எச்.ராஜா, திட்டமிட்டபடி அதே வழியில்தான் செல்வோம் என்றார். அதற்கு போலீசார் மறுத்தனர். அப்போது, நீதிமன்றம் மற்றும் காவல் துறை குறித்து எச்.ராஜா கடுமையாக விமர்சித்து பேசினார்.

அந்த உரையாடலின் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. எச்.ராஜாவின் பேச்சுக்கு பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.இந்நிலையில், எச்.ராஜா, இந்து முன்னணி மாநில பொருளாளர் பழனிவேல்சாமி, புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் கற்பக வடிவேல், சிவகங்கை மாவட்ட செயலாளர் அக்னி பாலா, மெய்யபுரம் ஒருங்கிணைப்பாளர் கணேசன், பா.ஜ.க. சிவகங்கை மாவட்டச் செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட 18 பேர் மீது திருமயம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.நீதிமன்றத்தை மதிப்பவன் நான். நீதிமன்றம் குறித்து நான் பேசியதை எடிட் செய்து பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். இது போன்று தொடர்ந்து பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என எச்.ராஜா தாம் பேசவில்லை என மறுத்திருந்தார்.

இந்நிலையில் சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் சி.சி.செல்வம் அமர்வு எச்.ராஜா மீது தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது எச்.ராஜாவுக்கு நோட்டிஸ் அனுப்பியது. அதில், காவல்துறை, நீதித் துறையை விமர்சித்தது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்றும், 4 வாரத்துக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் இது போன்ற விவகாரங்களை என்றும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்து ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் எச்.ராஜாவை ஆஜராக சிடி.செல்வம் அமர்வு உத்தரவிட்டிருந்ததை அடுத்து நேற்று எச்.ராஜா சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி சி.டி.செல்வம், நிர்மல் குமார் அமர்வு முன் ஆஜரானார்.

எச்.ராஜாவின் வழக்கறிஞர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், நீதிமன்றங்கள் குறித்து தாம் பேசிய வார்த்தைக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும், அந்த நேரத்தில் நடந்த யதார்த்தமான நிகழ்வில் வாய்த்தவறி பேசி விட்டதாகவும், எந்தவித உள்நோக்கம் கொண்டு தாம் அவமதிக்கும் எந்த நோக்கத்துடன் அவ்வாறு தெரிவிக்கவில்லை என்றும், தான் வாய் தவறி உணர்ச்சி வசப்பட்டு அவ்வாறு பேசியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை படித்த நீதிபதிகள் இது போன்ற தவறு எதிர்காலத்தில் இனி நேரக் கூடாது என எச்.ராஜாவுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள் நீதிமன்ற அவதூறு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து