முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டின் இறையாண்மைக்கு சவால் விடுத்தால் பதிலடி கொடுப்போம்: பிரதமர் எச்சரிக்கை

திங்கட்கிழமை, 22 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,நாட்டின் இறையாண்மைக்கு சவால் விடுத்தால் இருமடங்கு வலிமையுடன் பதிலடி கொடுப்பதற்கு இந்தியா தயங்காது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அருணாசலப் பிரதேசத்தை உரிமை கொண்டாடி வரும் சீனாவுக்கும், காஷ்மீரின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து வைத்துள்ள பாகிஸ்தானுக்கும் மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் பிரதமர் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டன் ஆதிக்கத்தில் இருந்த தேசத்தை விடுதலைக்கு முன்னரே சுதந்திர இந்தியாவாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிரகடனப்படுத்தினார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்நிகழ்வு நடந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதைச் சிறப்பிக்கும் வகையில் டெல்லி செங்கோட்டையில்  அரசு சார்பில் விழா நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, மூவர்ணக் கொடியை ஏற்றினார்.நேதாஜியின் படையில் இருந்தவரும், அவரது உதவியாளராக செயல்பட்டவருமான மூத்த வீரர் லால்டி ராம், அப்போது சுபாஷ் சந்திரபோஸால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்தில் பயன்படுத்தப்பட்ட தொப்பியை பிரதமருக்கு அன்பு பரிசாக அளித்தார். அதனை ஆர்வத்துடன் வாங்கி அணிந்து கொண்ட மோடி, அவருக்கு நன்றி தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, விழாவில் பிரதமர் பேசியதாவது:இந்திய வரலாற்றில் நீக்கமற நிறைந்திருக்கும் பெயர் நேதாஜி. அவரும், சர்தார் வல்லபபாய் படேலும், அண்ணல் அம்பேத்கரும் இந்த நாட்டுக்காக எத்தனையோ தியாகங்களை புரிந்திருக்கிறார்கள். விடுதலை வேள்வியில் தங்களையும் இணைத்து கொண்டு அயராது பாடுபட்டிருக்கின்றனர். ஆனால், அவர்களுக்குச் சேர வேண்டிய புகழும், கெளரவமும் திட்டமிட்டு மறக்கடிக்கப்பட்டுள்ளது.அந்த புகழுக்கும், பெருமைக்கும் ஒரே ஒரு குடும்பம் (நேரு வம்சாவளியினர்) மட்டுமே உரிமை கொண்டாடி வருகிறது. இது மிகத் தவறான விஷயம். தேசத்துக்காக நேதாஜி உள்ளிட்ட வீரர்கள் எவ்வாறு உழைத்தனர் என்ற வரலாற்று உண்மையை ஒவ்வோர் இந்தியரும் உணர்ந்து கொள்ள வேண்டிய உச்சகட்ட தருணம் இது. இருட்டடிப்பு செய்யப்பட்ட நிஜங்களை வெளிக்கொணரச் செய்ய வேண்டிய நேரம் இது.

சுபாஷ் சந்திரபோஸ் போன்ற ஒரு தலைவரின் புகழ் மங்கிவிடக் கூடாது. 16 வயது பதின் இளைஞனாக இருந்தபோதே அவருக்கு பாரத தேசத்தின் மீது தீராத பற்று ஏற்பட்டுவிட்டது. பிரிட்டன் ஆட்சியின் கீழ் இந்தியா இருப்பதை அவர் அறவே வெறுத்தார்.
 தேசத்தின் படை பலத்தை பெருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வீரர்களுக்கு அதி நவீன ஆயுதங்களும், நவீன தொழில்நுட்ப கண்காணிப்பு வசதிகளும் அளிக்கப்பட்டுள்ளன. ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு ஒரே பதவி; ஒரே ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ரூ.11 ஆயிரம் கோடி இதுவரை வழங்கப்பட்டுள்ளது.இந்தியாவைப் பொருத்தவரை ராணுவ வலிமையை தற்காப்புக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. அதன் காரணமாகவே வேறு எந்த நாட்டுக்குச் சொந்தமான பகுதிக்கும் நாம் உரிமை கோருவதில்லை. அதேவேளையில், நமது இறையாண்மைக்கு சவால் விடுக்க எவரேனும் நினைத்தால், இருமடங்கு வலிமையோடு பதிலடி தரப்படும் என்றார் பிரதமர் மோடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து