முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 39 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் :அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 23 அக்டோபர் 2018      விருதுநகர்
Image Unavailable

விருதுநகர்-மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 39 பயனாளிகளுக்கு ரூ.17.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் கலெக்டர் சிவஞானம் முன்னிலையில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி  தலைமையில், வேளாண் வளர்ச்சி (ம) விவசாயிகளின் நலன் சார்ந்த திட்டங்கள் குறித்தும் மற்றும் அனைத்துத்துறை திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்தும் அனைத்து துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் மழை அளவு விபரம், அணைகள் மற்றும் கண்மாய்களில் நீர் இருப்பு விபரம்,  வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள் குறித்து அலுவலர்களிடம் இருந்து கேட்டறிந்து பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
 இக்கூட்டத்தில், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது தெரிவித்ததாவது :-
அம்மா வழிகாட்டுதலின்படி நடைபெற்று வரும் தமிழக அரசு மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. வறட்சி என்றாலும் சரி, வெள்ளம் என்றாலும் சரி மக்களுக்காக அனைத்து தேவைகளையும் உரிய நேரத்தில் வழங்கி வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் 2018-ம் ஆண்டு 811.70மி.மீ சராசரி மழையளவில் தற்போது வரை 406.87 மி.மீ மழை பெய்துள்ளது. மழைநீரை சேகரிப்பதினால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களிடம் அனைத்துத் துறை அலுவலர்களும் எடுத்துரைக்க வேண்டும். .
 மேலும் விருதுநகர் மாவட்டத்தில் நடப்பு ராபி பருவத்தில் 25,000 எக்டேர் பரப்பளவில் நெல் பயிரும், 45,000 எக்டேர் பரப்பளவில் சிறுதானிய பயிர்களும், 13,000 எக்டேர் பரப்பளவில் பயிறு வகைகளும், 21,000 எக்டேர் பரப்பளவில் பருத்தி பயிரும் ஆக மொத்தம் 1,04,000 எக்டேர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
 கூட்டுப்பண்ணையத் திட்டத்தில் 2017-18-ம் ஆண்டில் 48 உழவர் உற்பத்தியாhள் குழுக்கள் அமைக்கப்பட்டு ஒரு குழுவிற்கு ரூ.5,00,000 வீதம் சுழல்நிதி வழங்கப்பட்டு பண்ணை இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.  மீன்வளத்துறையின் மூலம் 2018-19 ஆம் ஆண்டில் மீன் குஞ்சுகள் வளர்த்து எடுத்தல் திட்டத்தில் ரூ.15 லட்சத்திற்கு இலக்கீடு பெறப்பட்டு பிளவக்கல் அரசு மீன்குஞ்சு வளர்ப்பு பண்ணையில்  3லட்சம் விரலிகள் தற்போது விநியோகம் செய்ய தயாராக உள்ளது.
 விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம் நகராட்சிக்கு ரூ.197.79 கோடி மதிப்பீட்டிலும், சிவகாசி நகராட்சிக்கு ரூ.117.34 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் திருத்தங்கல் நகராட்சிக்கு ரூ.88.91 கோடி மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் ரூ.404.04 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.  மேலும், சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை மற்றும் விருதுநகர் ஆகிய ஒன்றியங்களில் உள்ள 755 கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் (சீவலப்பேரி தலைமையிடம்) திட்டம் ரூ.234 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள் நிறைவடைந்து, தற்போது மின் இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் நிறைவு பெற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் திறந்து வைக்கப்படவுள்ளது.
பொதுப்பணித்துறையின் மூலமாக கட்டப்பட்டு வரும் வெம்பக்கோட்டை வருவாய்  கோட்டாட்சியர்  அலுவலக கட்டிடம், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கட்டிடம், சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலக கட்டிடம்,  மற்றும் பள்ளிக்கட்டிடங்கள் என நடைபெற்றுக்கொண்டிருக்கும் அனைத்து கட்டிடப்பணிகளையும் விரைந்து முடிக்குமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காய்ச்சலால் பாதிக்கப்படும் நபர்கள் தன்னிச்சையாக  எவ்வித  மருத்துவமும் மேற்கொள்ளாமல் காய்ச்சல் அறிகுறி தென்பட்டவுடன் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் சென்று உரிய சிகிச்சைப் பெற வேண்டும். மேலும், அரசு மருத்துவமனைகள் மற்றும்; தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் மருத்துவ அலுவலர்கள் தொடர்ந்து பணயில்  இருக்க வேண்டும். 
 முன்னதாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 29 பயனாளிகளுக்கு தலா ரூ.58,840- வீதம் ரூ.17,06,360 மதிப்பிலான விலையில்லா இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், 10 பயனாளிகளுக்கு ரூ.4170 வீதம் ரூ.41,700 மதிப்பிலான மோட்டர் பொருத்திய இலவச தையல் இயந்திரங்களையும் என மொத்தம் ரூ.17,48,060 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். மேலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் திருவில்லிபுத்தூர் வட்டம், அழகுதேவேந்திராபுரம் பரிசுத்த லூகா ஆலயம் மற்றும் சாத்தூர் வட்டம் ஒ.மேட்டுப்பட்டி, குழந்தை இயேசு ஆலயம் ஆகிய கிறித்தவ தேவாலயங்களுக்கு பழுது பார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிக்காக ரூ.2,77,500 மதிப்பிலான காசோலைகளை அமைச்சர் வழங்கினார்.
 இந்நிகழ்ச்சியில், விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் மு.சந்திரபிரபா, மாவட்ட வருவாய் அலுவலர் கோ.உதயகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சுரேஷ் உட்பட அனைத்து துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து