முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவரக்கோட்டை கமண்டல நதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தீவிரம்: விவசாயிகள் மகிழ்ச்சி:

செவ்வாய்க்கிழமை, 23 அக்டோபர் 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா சிவரக்கோட்டை கிராமத்தில் கமண்டல நதியில் உள்ள முட்புதர்கள்,பாலத்தின் இடிபாடுகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் அனைத்தும் பொதுப்பணித்துறையின் சார்பில் அதிநவீன இயந்திரங்களைக் கொண்டு அகற்றப்பட்டு வருவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளிக்குடி தாலுகா சிவரக்கோட்டை கிராமத்தின் வழியாகச் புகழ்பெற்ற கமண்டல நதி செல்கிறது.தெக்காறும்,வறட்டாறும் ஒன்றும் சேர்ந்திடும் இடமான சிவரக்கோட்டையிலிருந்து இந்த கமண்டலநதி உருவாகிறது.இதில் மேலும் சில ஆறுகளும் சேர்ந்து திருச்சுழி பகுதியில் குண்டாற்றுடன் இந்த நதி இணைந்து கமுதி,கடலாடி வழியாகச் சென்று கடந்து கடலில் கலக்கிறது.அண்மையில் கள்ளிக்குடி தாலுகாவில் பெய்த கனமழையின் காரணமாக காட்டாறுகள் ஒன்று சேர்ந்து தெக்காறு,வறட்டாறுகளில் கலந்து சிவரக்கோட்டை கமண்டல நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.அப்போது சிவரக்கோட்டை நான்கு வழிச்சாலை ஆற்றுப்பாலம் பகுதியில் அதிகளவு மண்மேடுகளும் முட்புதர்களும் ஆக்கிரமித்து இருந்ததாலும்,ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழைய ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்து தங்கு தடையின்றி தண்ணீர் விரைந்து சென்றிட அதன் இடிபாடுகள் தடை ஏற்படுத்தி வந்ததாலும் சாகுபடி பணிகளுக்கு தண்ணீரை பயன்படுத்திட முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வந்தனர்.
இதையடுத்து மதுரை மாவட்ட விவசாயிகள் சங்கத்தலைவர் ராமலிங்கம் தலைமையிலான விவசாயிகள் குழுவினர் சிவரக்கோட்டை கமண்டல நதியில் ஆக்கிரமித்துள்ள முட்புதர்களையும்,மண் மேடுகளையும்,பாலத்து இடிபாடுகளையும் அகற்றிட வேண்டும் என்று மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கும்,பொதுப்பணித் துறையினருக்கும் கோரிக்கை விடுத்திருந்தனர்.இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் விஸ்வநாத்,உதவி செயற்பொறியாளர் லீலாவதி,உதவி பொறியாளர் குணசேகரன்ஆகியோர் முன்னிலையில் பொதுப்பணித்துறையின் சார்பில் கமண்டல நதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அதிநவீன ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு அகற்றிடும் பணிகள் நேற்று காலை தொடங்கியது.அதன்படி நான்குவழிச்சாலை பாலத்தின் கீழ்பகுதியில் நடைபெற்ற இந்த ஆக்கிரமிப்பு அகற்றிடும் பணிகளை மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் குணாளன்,உசிலம்பட்டி கோட்டாட்சியர் முருகேசன்,கள்ளிக்குடி வட்டாட்சியர் ஆனந்தவள்ளி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மின்னல் வேகத்தில் நடைபெற்ற இந்த ஆக்கிரமிப்பு அகற்றிடும் பணிகளின் போது கமண்டல நதியில் உள்ள முட்புதர்கள்,மண்மேடுகள் மற்றும் உடைந்து கிடந்த பாலத்தின் இடிபாடுகள் அனைத்தும் அகற்றப்பட்டு தண்ணீர் தங்குதடையின்றி செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டது.இதனால் சிவரக்கோட்டை,அரசபட்டி,குராயூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களின் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து மாவட்ட நிர்வாகத்திற்கும்,பொதுப்பணித் துறையினருக்கும் நன்றி தெரிவித்தனர்.மேலும் கமண்டலநதியில் திரளி முதல் அரசபட்டி வரையில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டிட 2.5கோடி மதிப்பீட்டிலும்,அரசபட்டி முதல் குராயூர் வரை சீரமைப்பு பணிகளை மேற்கொண்டிட ரூ.3.4கோடி மதிப்பீட்டிலும் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை செயல்படுத்திட ஒப்புதல் கிடைத்திடுமானால் மழைக்காலத்திற்கு முன்பாகவே பணிகளை முடித்துவிட தாங்கள் தயார் நிலையில் இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த பணிகளின் போது வருவாய்த்துறை,பொதுப்பணித்துறை மற்றும் உள்ளுர் பிரமுகர்கள் ராமலிங்கம்,அன்னமுத்து,ஆதிராஜா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து