முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் நகரில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் தடுப்பு பணிகள் குறித்து உசிலம்பட்டி கோட்டாட்சியர் ஆய்வு:

புதன்கிழமை, 24 அக்டோபர் 2018      மதுரை
Image Unavailable

 திருமங்கலம். -மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் மற்றும் ஊரக பகுதிகளில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் தடுப்பு பணிகள் குறித்து உசிலை கோட்டாட்சியர் முருகேசன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருமங்கலம் நகராட்சி ஆணையாளர் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
 தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலை  கட்டுப்படுத்துவது தொடர்பாக மண்டல அலுவலர்களை சுகாதாரத்துறையினர் நியமித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக திருமங்கலத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் ஒழிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இதனிடையே திருமங்கலம் நகர் மற்றும் ஒன்றிய ஊரக பகுதியில் கண்காணிப்பு மண்டல அலுவலராக உசிலை கோட்டாட்சியர் முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
 இதனைத் தொடர்ந்து நேற்று திருமங்கலம் அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடம் காய்ச்சல் குறித்து கேட்டறிந்தார்.மேலும் கழிப்பறை தண்ணீர் தொட்டி உள்ளிட்ட டெங்கு பரவ வாய்ப்பு உள்ள பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.இதனைத் தொடர்ந்து திருமங்கலம் நகரில் உள்ள 27 வார்டுகளுக்கும் சென்று டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
 பின்னர் செய்தியாளர்களிடம் கோட்டாட்சியர் முருகேசன் கூறியதாவது: திருமங்கலம் நகரில் உள்ள  27 வார்டுகளில் 18 ஆயிரத்து 148 வணிக வளாகங்கள் கல்வி நிறுவனங்கள் வீடுகள் உள்ளன. இவற்றை தினந்தோறும் கண்காணிப்பதற்காக 60 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு வீடுவீடாகச் சென்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.மேலும் போர்க்கால அடிப்படையில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் தடுப்பு குறித்து பல்வேறு பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.வீடுகளில் தண்ணீர் தொட்டி உள்ளிட்ட டெங்கு கொசு பரவும் நிலையில் பொதுமக்கள் வைத்திருந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.கடந்த ஆண்டு 53% பேர் திருமங்கலம் பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.தற்போது ஜீரோ சதவீதம் காய்ச்சல் கூட இல்லாத அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
 அப்போது  திருமங்கலம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் பூமிநாதன் கூறுகையில் காய்ச்சலால் 19 பேர் இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர் தினந்தோறும் 300க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.டெங்கு நோய் மற்றும் பன்றி காய்ச்சல் அறிகுறிகள் எதுவும் இந்த பகுதியில் கிடையாது.என்று தெரிவித்தார். இந்த ஆய்வின் போது திருமங்கலம் நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா, சுகாதார அலுவலர் சீனிவாசன், ஆய்வாளர் சிக்கந்தர், திருமங்கலம் தாசில்தார் நாகரத்தினம் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து