முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு மக்களுக்கு கிடைத்த வெற்றி துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டி

வியாழக்கிழமை, 25 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

மணப்பாறை,18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அம்மாவுக்கு கிடைத்த வெற்றி...18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை அ.தி.மு.க.வுக்கு சாதகம் என்று சொல்ல முடியாது. நீதிமன்றம் ஒரு நியாயமான தீர்ப்பை வழங்கியுள்ளது. மக்களின் எண்ணத்திற்கு ஏற்ப வழங்கிய தீர்ப்பை சாதகம், பாதகம் என்று கூறக் கூடாது. நீதித்துறை பற்றி அவ்வாறு கருத்து சொல்வது சரியல்ல. சட்டப்பேரவை சபாநாயகர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தாமல் ஒரு ஜனநாயகத்தை காக்க வேண்டும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ஆட்சி தொடர வேண்டும் என்று சட்டத்திற்கு உட்பட்டு ஒரு நல்ல முடிவை எடுத்திருக்கிறார். அதை சிலர் கொச்சைப்படுத்தியதால் தான் இந்த பிரச்சனை ஏற்பட்டது. நீதித் துறையும் அவர் எடுத்த முடிவு சரியானது என்று தீர்ப்பின் மூலம் தெரிவித்து இருக்கிறது. இது மக்களுக்கு கிடைத்த வெற்றி, அம்மாவுக்கு கிடைத்த வெற்றி என்றே சொல்ல முடியும்.

நினைக்க மாட்டார்கள்....தேர்தல் காலங்களில் அம்மாவுடன் பல பகுதிகளுக்கு சென்றவன் நான். அப்போதெல்லாம் அம்மா தனது உடலை வருத்திக் கொண்டு எம்.ஜி.ஆர். தொடங்கிய இந்த இயக்கம் தொடர வேண்டும், மக்களுக்கு நல்லாட்சி தர வேண்டும் என்று இந்த ஆட்சியை கொண்டு வந்தார். ஆனால் நமது துரதிஷ்டம் அவர் இல்லாமல் போனது. அவர் விட்டுச்சென்ற பணிகளை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அரசு சிறப்பாக செயலாற்றி வருகிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எம்.எல்.ஏ. யாரும் இந்த ஆட்சியை கவிழ்க்க நினைக்க மாட்டார்கள். எந்த ஒரு கருத்து இருந்தாலும் ஜனநாயகத்தில் பேச வேண்டுமே தவிர அதற்கென்று வழிமுறை உள்ளது. வேறு வழியில் சென்று ஆட்சியை கவிழ்ப்பேன் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் செய்வது சரியல்ல என்பது தான் சரியான தீர்ப்பு.

மக்களின் தீர்ப்பு....1984-89 நாடாளுமன்ற துணை சபாநாயகராக இருந்த போது இந்த கட்சி தாவல் சட்டம் வந்தது. கட்சி தாவல் மூலம் கட்சி ஆட்சி மாறினால் ஜனநாயகம் நல்ல முறையில் இருக்காது, மக்களுக்கு நல்லது செய்ய முடியாது. எனவே கட்சி தாவல் இருக்க கூடாது, குறுக்கு வழியில் ஆட்சியை கவிழ்க்க கூடாது என்ற அடிப்படையில் சபாநாயகர் நல்ல முடிவை எடுத்துள்ளார். இது மக்களின் தீர்ப்பு. ஜனநாயகத்தில் கோர்ட்டிற்கு யார் வேண்டுமானாலும் செல்லலாம். அது அவர்களின் உரிமை. நாங்கள் அப்பீல் செய்ய முடியாது. எங்களுக்கு நகர்வு தேவை இல்லை. அவர்களின் நகர்விற்கு தடையாக இருக்க முடியாது.
இரு அணிகளையும் இணைக்க பா.ஜ.க. முயற்சி செய்வது குறித்து எனக்கு தெரியாது. பா.ஜ.க.விடம் தான் கேட்க வேண்டும். எனக்கு தெரிந்து தி.மு.க. பா.ஜ.க.வை நெருங்கி கொண்டு உள்ளது. அதற்கு பல ஆதாரங்களை கூறியுள்ளேன். முதலில் பா.ஜ.க.வை மதவாதம் என்று திமு.க கூறியது. தற்போது தனது நிலையை மாற்றியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து