முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மண்டல பூஜை காலத்தில் சபரிமலை சன்னிதானத்தில் ஒரு நாளைக்கு மேல் பக்தர்கள் தங்க தடை: டிஜிபி யோசனை

வியாழக்கிழமை, 25 அக்டோபர் 2018      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம்,மண்டல பூஜை காலத்தின் போது சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று பினராயி விஜயன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் தரப்பில் எடுத்துக் கூறப்பட்டது.

16-ல் கோவில் நடை திறப்பு....சபரிமலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை விழாவுக்காக அடுத்த மாதம் 16-ந்தேதி கோவில் நடை திறக்கப்பட உள்ளது. மண்டல பூஜையின் போது 41 நாட்கள் கோவில் நடை திறந்து இருக்கும். கேரளா, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் குவிவார்கள். லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வரும்போது அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுப்பதில் பெரும் சிரமம் ஏற்படும்.

பினராய் தலைமையில் கூட்டம்....இந்தநிலையில் இளம்பெண்களும் அதிக அளவு சபரிமலைக்கு வர வாய்ப்பு உள்ளது. இதனால் அவர்களை பாதுகாப்பாக சன்னிதானத்திற்கு அழைத்துச் செல்வது என்பது போலீசாருக்கு பெரும் சவாலாகவே இருக்கும். இதைத் தொடர்ந்து மண்டல பூஜையின் போது சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், வசதிகள் பற்றி ஆலோசனைக்கூட்டம் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா, ஏ.டி.ஜி.பி. அனில் காந்த், ஐ.ஜி. மனோஜ் ஆபிரகாம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தங்க அனுமதிக்க கூடாது.....இந்த கூட்டத்தில் மண்டல பூஜையின் போது சபரிமலை சன்னிதானத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் எடுத்துக் கூறப்பட்டது. குறிப்பாக சபரிமலை சன்னிதானம் வரும் ஐயப்ப பக்தர்கள் அங்கு ஒரு நாளுக்கு மேல் தங்க அனுமதிக்க கூடாது. சன்னிதானத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் பக்தர்கள் தங்க ஒரு நாளைக்கு மேல் அறைகளை வழங்க கூடாது போன்றவை பற்றி போலீசார் பரிந்துரை செய்தனர். ஐப்பசி மாத பூஜையின் போது சபரிமலை வந்த பக்தர்கள் பல நாட்கள் அங்கேயே தங்கியதால் தான் வன்முறை சம்பவங்கள் நடந்தது. அது தொடர்பாக இதுவரை 146 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது என்று டி.ஜி.பி. லோக்நாத்பெக்ரா தெரிவித்தார். இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது தொடர்பாக விரைவில் புதிய உத்தரவுகளை மாநில அரசு பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து