முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரபேல் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள மோடிக்கு பயம்: ராகுல் காந்தி தாக்கு

வெள்ளிக்கிழமை, 26 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

ஜெய்ப்பூர்,ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான வழக்கு விசாரணையை எதிர்கொள்ள பிரதமர் மோடி பயந்துவிட்டார். எனவே தான், சி.பி.ஐ. இயக்குநர் மீது தன்னிச்சையாக அவர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.ராஜஸ்தான் மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த ராகுல், மாநில காங்கிரஸின் மகளிர் அணியினரிடம்  பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:பாதுகாப்புத் துறை அமைச்சகம் மற்றும் இந்திய விமானப் படையின் பல ஆண்டு கடின உழைப்புக்குப்பின், பிரான்ஸ் நாட்டுடன் ரபேல் போர் விமான ஒப்பந்தம் காங்கிரஸ் ஆட்சியின்போது கையெழுத்தானது. ஆனால், அந்த ஒப்பந்தத்தை விட அதிக செலவில், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு உதவி செய்யும் நோக்கில், ஒரு புதிய ஒப்பந்தத்தை மோடி ஏற்படுத்தினார். பாதுகாப்பு அமைச்சரையோ, பாதுகாப்பு அமைச்சகத்தையோ, விமானப் படையையோ கலந்தாலோசிக்காமல், ரூ.30,000 கோடி மதிப்பிலான அந்த ஒப்பந்தத்தை மோடி தன்னிச்சையாக மாற்றி அமைத்தார்.தற்போது, அந்த விவகாரத்தில் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து, தன்னை விசாரிக்க நேரிடுமோ என்று பயந்து, சி.பி.ஐ. இயக்குநரை நள்ளிரவு 1 மணிக்கு வலுக்கட்டாயமாக அந்தப் பொறுப்பிலிருந்து மோடி நீக்கியுள்ளார். இது சட்டத்துக்குப் புறம்பானதாகும். சி.பி.ஐ. இயக்குநரை நீக்க வேண்டுமெனில், பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகிய மூவரின் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு, அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே அவரை நீக்க முடியும். ஆனால், மற்றவர்களைக் கலந்தாலோசிக்காமல், மோடி தன்னிச்சையாக அவரைப் பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளார். இதன்மூலம், மோடி அரசியலமைப்புச் சட்டத்தை அவமதித்துள்ளார்.

இந்தியாவின் காவலாளியாகத் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் மோடி, தான் ரூ.30,000 கோடி திருடிய திருடன் என்பதை மக்கள் கண்டுபிடித்து விடுவார்களோ என்று பயந்து, சி.பி.ஐ. இயக்குநர் மீது இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.அலோக் வர்மாவை நீக்கிவிட்டு, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவருக்கு இடைக்கால இயக்குநர் பொறுப்பை மோடி வழங்கியுள்ளதன் மூலம், அவரைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள மோடி முயல்கிறார்.பெண்கள் வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என்று பா.ஜ.க.-வும், ஆர்.எஸ்.எஸ்-உம் வலியுறுத்தி வருகின்றன. ஆர்.எஸ்.எஸ் கூட்டங்களில் ஒரு பெண்ணைக் கூடக் காண முடியாது. பா.ஜ.க. மகளிரணி தனியாக இருந்தாலும், அது பெயரளவில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. அதற்கான முடிவுகளையும் ஆண் தலைவர்களே எடுத்து வருகின்றனர். மாநிலத்தின் முதல்வர் பெண்ணாக இருந்தபோதிலும், அவரின் கொள்கைகள் அனைத்தும் பெண்களுக்கு எதிராகவே உள்ளன.  என்று ராகுல் தெரிவித்தார்.ராகுலின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக ராகுல் தினமும் பொய் கூறி வருகிறார். மக்களிடையே காங்கிரஸ் அதன் முக்கியத்துவத்தை இழந்துவிட்டதால், இல்லாதது எல்லாம் அவருக்கு இருப்பது போல் தோன்றுகிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து