முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோலியின் சாதனை சதம் வீண்: 3-வது ஒரு நாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி - சமநிலையை அடைந்தது தொடர்

ஞாயிற்றுக்கிழமை, 28 அக்டோபர் 2018      விளையாட்டு
Image Unavailable

புனே : இந்திய அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் 1-1 என சமநிலை அடைந்துள்ளது.

புனேவில் உள்ள மகராஷ்டிரா கிரிக்கெட் சங்க சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் 3 மாற்றங்கள் இருந்ததன. மொகமது ஷமி, உமேஷ் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு பதிலாக புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, கலீல் அகமது ஆகியோர் சேர்க்கப்பட்டனர். மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அந்த அணியில் சுழற்பந்து வீச்சாளர் தேவந்திர பிஷூ நீக்கப்பட்டு ஆல்ரவுண்டரான பேபியன் ஆலன் சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு சந்தர்பால் ஹேம்ராஜ், கெய்ரன் பொவல் ஜோடி சீரான தொடக்கம் கொடுத்தது. பும்ரா வீசிய 6-வது ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி, சிக்ஸர் விளாசிய ஹேம்ராஜ் கடைசி பந்தையும் விளாச முயன்ற போது தோனியின் அபாரமான கேட்ச்சால் ஆட்டமிழந்தார். 20 பந்துகளை சந்தித்த சந்தர்பால் ஹேம்ராஜ் 15 ரன்கள் எடுத்தார். இதையடுத்து ஷாய் ஹோப் களமிறங்கினார். அடுத்த சில ஓவர்களில் கெய்ரன் பொவலையும் (21), பும்ரா வெளியேற்றினார். 145 கி.மீ. வேகத்தில் வீசப்பட்ட பந்தை பொவல் தொட முயன்ற போது முதல் சிலிப் திசையில் நின்ற ரோஹித் சர்மாவிடம் கேட்ச் ஆனது. வலதுபுறம் மின்னல் வேகத்தில் வந்த கேட்ச்சை ரோஹித் அற்புதமாக மடக்கினார்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய மார்லோன் சாமுவேல்ஸ் 17 பந்துகளில், 9 ரன்கள் எடுத்த நிலையில் கலீல் அகமது பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 55 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் ஷாய் ஹோப்புடன் இணைந்த சிம்ரன் ஹெட்மையர் மட்டையை சுழற்றினார். யுவேந்திர சாஹல் வீசிய 15-வது ஓவரின் கடைசி பந்தை ஷாய் ஹோப், மிட்விக்கெட் திசையை நோக்கி சிக்ஸர் விளாசினார். இதையடுத்து சாஹல் வீசிய 17 மற்றும் 19-வது ஓவர்களில் தலா ஒரு சிக்ஸர் விளாசி மிரட்டினார் ஹெட்மையர். குல்தீப் யாதவ் புல்டாசாக வீசிய 20-வது ஓவரின் முதல் பந்தை சிக்ஸராக மாற்றி ஹெட்மையர் 3-வது பந்தில் தோனியின் மதிநுட்பத்தால் ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.

21 பந்துகளை சந்தித்த ஹெட் மையர், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் சேர்த்தார். 4-வது விக்கெட்டுக்கு ஷாய் ஹோப்புடன் இணைந்து ஹெட்மையர் 6.2 ஓவர்களில் 56 ரன்கள் விளாசியிருந்தார். இதையடுத்து களமிறங்கிய ரூவன் பொவல் (4), குல்தீப் யாதவ் பந்தை முட்டு போட்டு விளாச முயன்றார். ஆனால் நன்கு சுழன்று வந்த பந்து மட்டை விளிம்பில் பட்டு சிலிப் திசையில் நின்ற ரோஹித் சர்மாவிடம் கேட்ச் ஆனது. இதைத் தொடர்ந்து ஷாய் ஹோப்புடன் இணைந்த கேப்டன் ஜேசன் ஹோல்டர் நிதானமாக பேட் செய்தார். சீராக ரன்கள் சேர்த்த ஷாய் ஹோப் 72 பந்துகளில் தனது 7-வது அரை சதத்தை கடந்தார்.

இதன் பின்னர் ரன் குவிக்கும் வேகத்தை அவர், அதிகரித்தார். கலீல் அகமது வீசிய 35 மற்றும் 37-வது ஓவர்களில் தலா ஒரு சிக்ஸர் விளாசினார் ஷாய் ஹோப். குல்தீப் யாதவ் வீசிய 38-வது ஓவரில் ஜேசன் ஹோல்டர் லாங் ஆன் திசையில் சிக்ஸர் ஒன்றை பறக்கவிட்டார்.

சுமார் 15 ஓவர்கள் நிலைத்து நின்று விளையாடிய இந்த ஜோடியை புவனேஷ்வர் குமார் பிரித்தார். பேக் ஆப் லென்ந்த்தில் வீசப்பட்ட பந்தை ஜேசன் ஹோல்டர் லாங் ஆப் திசையில் தூக்கி அடித்த போது பதிலி வீரராக நின்ற ஜடேஜாவிடம் கேட்ச் ஆனது. 39 பந்துகளை சந்தித்த ஜேசன் ஹோல்டர் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்தார்.

6-வது விக்கெட்டுக்கு ஷாய் ஹோப்புடன் இணைந்து ஜேசன் ஹோல்டர் 76 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து ஃபேபியன் ஆலன் களமிறங்கினார். 40 ஓவர்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 211 ரன்கள் எடுத்தது. வந்த வேகத்திலேயே அதிரடியாக விளையாட முயன்ற ஆலன் 5 ரன்கள் எடுத்த நிலையில் சாஹல் பந்தை லாங் ஆன் திசையில் தூக்கி அடிக்க அது, ரிஷப் பந்திடம் கேட்ச் ஆனது. இதையடுத்து ஆஷ்லே நர்ஷ் களமிறங்கினார்.

சிறப்பாக பேட் செய்து வந்த ஷாய் ஹோப் 113 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 95 ரன்கள் எடுத்த நிலையில் பும்ராவின் யார்க்கர் பந்தில் போல்டானார். அப்போது ஸ்கோர் 43.5 ஓவர்களில் 227 ஆக இருந்தது.

கடைசி கட்டத்தில் ஆஷ்லே நர்ஷ், கேமார் ரோச் அதிரடியாக விளையாடினார்கள். ஆஷ்லே நர்ஷ் 22 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் விளாசிய நிலையில் பும்ராவின் கடைசி ஓவரில் போல்டானார். இந்த ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்தது. இதில் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கும். 50 ஓவர்கள் முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 283 ரன்கள் குவித்தது. கேமார் ரோச் 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 10 ஓவர்கள் வீசி ஒரு மெய்டனுடன் 35 ரன்களை விட்டுக் கொடுத்த நிலையில் 4 விக்கெட்கள் வீழ்த்தினார். குல்தீப் யாதவ் 2 விக்கெட்களும் புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, யுவேந்திர சாஹல் ஆகியார் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதையடுத்து 284 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 47.4 ஓவர்களில் 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி தரப்பில் சாமுவேல்ஸ் 3 விக்கெட்களும் ஜேசன் ஹோல்டர், மெக்காய், ஆஷ்லே நர்ஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர். 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 1-1 என சமநிலையை அடையச் செய்துள்ளது. 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து