முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க மாகாண முறையீட்டு நீதிமன்றத்துக்கு இந்திய அமெரிக்க பெண் நீதிபதி பெயர் பரிசீலனை

புதன்கிழமை, 31 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்க மாகாண முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பதவிக்கு, இந்திய அமெரிக்க பெண் நீதிபதி நியோமி ஜெஹாங்கிர் ராவை (45) அதிபர்  டிரம்ப் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ஆக்ஸியோஸ் என்ற செய்தி வலைதளம் கூறியுள்ளதாவது:- அமெரிக்காவின் கொலம்பியா மாகாண முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பதவிக்கு, இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் நீதிபதி நியோமி ஜெஹாங்கிர் ராவை வெள்ளை மாளிகை முன்னாள் ஆலோசகர் டான் மெக்கேஹன் அதிபர் டிரம்ப்புக்கு பரிந்துரைத்துள்ளார்.
அதையடுத்து, தற்போது தகவல் மற்றும் ஒழுங்குமுறை விவகார அலுவலக நிர்வாகியாகப் பொறுப்பு வகித்து வரும் நியோமியுடன் டிரம்ப் நேர்காணல் நடத்தியுள்ளார் என்று அந்த வலைதளம் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் துணை நீதிபதியாக இருந்த அந்தோணி கென்னடியின் பதவிக் காலம் முடிவடைந்ததையடுத்து, அந்தப் பதவிக்கு பிரெட் காவனாவின் பெயரை அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஜூலை மாதம் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, பிரெட் காவனா மீது கிறிஸ்டைன் பிளேசி போர்டு என்பவர் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். 1980-களில் பிரெட் காவனா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக அவர் குற்றம் சாட்டினார்.

அவரைத் தொடர்ந்து, டெபோரா ரமீரெஸ் (53) என்ற பெண்ணும் பிரெட் காவனா மீது பாலியல் குற்றம் சாட்டினார். மேலும், ஜூலி ஸ்வெட்னிக் உள்ளிட்ட இரு பெண்கள் கவானா மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர். இந்தச் சூழலில், காவனா மீதான பாலியல் புகார் அளித்த கிறிஸ்டைன் பிளேசி போர்டிடமும், காவனாவிடமும் நாடாளுமன்ற குழு தனித் தனியாக விசாரணை நடத்தியது. மேலும், இதுகுறித்து அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யும் இதுகுறித்து விசாரணை நடத்தியது.

இந்த நிலையில், அவரது நியமனத்துக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, அவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்த மாதம் 8-ம் தேதி பொறுப்பேற்றார்.

அதையடுத்து, அவர் ஏற்கெனவே வகித்து வந்த கொலம்பியா மாகாண முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி பதவி காலியானது.

இந்தப் பதவிக்காகவே தற்போது நியோமி ஜெஹாங்கிர் ராவுடன் அதிபர் டிரம்ப் நேர்காணல் நடத்தியுள்ளார். ஏற்கெனவே, இந்தப் பதவிக்காக இந்திய அமெரிக்கர் ஸ்ரீ சீனிவாசன் உள்பட பலரை வரவழைத்து டிரம்ப் நேர்காணல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து