முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹசிம்புராவில் 42 பேர் கொலை வழக்கு: 16 முன்னாள் காவலர்களுக்கு ஆயுள்- டெல்லி ஐகோர்ட் தீர்ப்பு

வியாழக்கிழமை, 1 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

லக்னோ, உத்தரப் பிரதேச மாநிலம், மீரட் அருகேயுள்ள ஹசிம்புராவில், கடந்த 1987-இல் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த 42 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், ஆயுதப்படையைச் சேர்ந்த முன்னாள் காவலர்கள் 16 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம்   தீர்ப்பளித்தது.

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.முரளீதர், வினோத் கோயல் கியோர் அடங்கிய அமர்வு இத்தீர்ப்பை வழங்கியது. முன்னதாக, அந்த 16 பேரையும் விடுவித்து விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நீதிபதிகள் ரத்து செய்தனர்.

நிராயுதபாணியாக, தற்காப்புக்கு வழியின்றி இருந்த மக்களை காவலர்கள் திட்டமிட்டுக் கொன்றுள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

தண்டனை பெற்றுள்ள 16 காவலர்கள் மீது, இந்திய தண்டனையியல் சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டிருந்த கடத்தல், குற்றச்சதி, கொலை, ஆதாரங்களை அழித்தல் ஆகிய அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன.

ஹசிம்புரா படுகொலை சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நீதி கிடைப்பதற்கு 31 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்ததை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், வெறும் நிவாரணத் தொகை மட்டும் அவர்களது இழப்புகளை ஈடு செய்துவிடாது என்று தெரிவித்தனர். குற்றவாளிகள் அனைவரும் இந்த மாதம் 22-ஆம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என்றும் டெல்லி  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

  கடந்த 1987-ஆம் ஆண்டில் மீரட் பகுதியில் வகுப்புவாத கலவரம் நடைபெற்றது. அதைக் கட்டுப்படுத்துவதற்காக ஆயுதப்படை, மத்திய ரிசர்வ் படை, ராணுவம் உள்ளிட்ட படைகள் களமிறக்கப்பட்டன. அந்தச் சமயத்தில் ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர்கள், சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்தவர்களை ஒரு குழுவாக லாரியில் ஏற்றிச் சென்று, ஆறுகளின் பாசனக் கால்வாய் அருகே வைத்து துப்பாக்கியால் சுட்டு தண்ணீரில் தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. அந்தச் சம்பவத்தில் 42 பேர் பலியாகினர். தோட்டா காயங்களுடன், தண்ணீரில் நீந்திப் பிழைத்த சிலர் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 19 காவலர்களுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக காசியாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், வழக்கு விசாரணை மிக தாமதமாக நடைபெற்று வந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று, வழக்கை டெல்லியில் உள்ள விசாரணை நீதிமன்றத்துக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் கடந்த 2002-இல் உத்தரவிட்டது.

இதற்கிடையே குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் ஓய்வு பெற்றனர். இந்தச் சூழலில், கடந்த 2006-ஆம் ஆண்டில், குற்றம்சாட்டப்பட்ட 19 காவலர்களில், 17 காவலர்கள் மீது, கடத்தல், கொலை, ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அதில் ஒருவர் உயிரிழந்துவிட்டார்.

கடந்த 2015-ஆம் ஆண்டில், விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோது, குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிரான ஆதாரங்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி அனைவரையும் விடுதலை செய்தது. அதனை எதிர்த்து, பாதிக்கப்பட்ட மக்கள், அரசு, மனித உரிமை அமைப்பு ஆகிய தரப்புகளின் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் தற்போது தீர்ப்பளித்துள்ள உயர் நீதிமன்றம், அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து