முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை விதித்தது ஐகோர்ட்

வியாழக்கிழமை, 1 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் 24 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதித்த சென்னை ஐகோர்ட் மனு தொடர்பாக சம்பந்தப்பட்ட சங்கங்களும், தமிழக அரசும் வரும் 8-ம் தேதி பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

போராட்ட அறிவிப்பு

தமிழகம் முழுவதும் ஆம்புலன்ஸ் சேவை 108 என்கிற எண் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. 108 ஆம்புலன்ஸ்களில் அவசர கால மருத்துவ நிபுணர், ஓட்டுநர், கால் சென்டர் தொழிலாளர்கள் என 4500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவ சேவைக்காக வாரத்தின் ஏழு நாட்களிலும் சுழற்சி முறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தீபாவளிக்கு 30 சதவிகிதம் போனஸ் வழங்க வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு அதாவது வரும் 5-ம் தேதி இரவு 8 மணி முதல் 6-ம் தேதி இரவு 8 மணி வரை 24 மணி நேரம் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.

ஐகோர்ட்டில் மனு

இந்நிலையில் இந்தப் போராட்டத்திற்கு தடை கேட்டு சேலத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில் தீபாவளி நேரத்தில் பொதுமக்கள் பட்டாசு வெடிக்கும் போது விபத்துகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. அப்போது ஆம்புலன்ஸ் ஊழியர்கள்தான் அவர்களை மீட்டு மருத்துவ சிகிச்சைக்கு அனுப்ப முடியும். மேலும் அத்தியாவசியத் தேவைகள் சட்டத்தின் அடிப்படையில் போராட்டம் நடத்த அனுமதியில்லை. எனவே ஆம்புலன்ஸ் ஊழியர்களின் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டுமென்று அதில் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

போராட்டத்திற்கு தடை

அப்போது ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி நேரத்தில் இதே போன்று 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பதும், பின்னர் நீதிமன்றம் தலையிட்டு தடை விதிப்பதும் தொடர் கதையாகி வருகிறது. எனவே இந்தப் பிரச்சினையில் தீர்வு காண அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அத்தியாவசிய சேவைகள் சட்டத்தின்கீழ் ஆம்புலன்ஸ் சேவை வருவதால் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் போராட்டத்திற்கு தடை விதிப்பதாக உத்தரவிட்ட நீதிமன்ற அமர்வு, மனு தொடர்பாக சம்பந்தப்பட்ட சங்கங்களும், தமிழக அரசும் வரும் 8-ம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து