முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டத்தைசெயல்படுத்த இடைக்கால தடை விதிப்பு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 2 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த இடைக்கால தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிபுரம் கிராமத்தில் அம்பரப்பர் மலை உள்ளது. இம்மலையில் சுமார் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக அம்பரப்பர் மலையைக் குடைந்து ஆய்வு மையம் அமைத்தால் தேனி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்ப்பு கிளம்பியது. மேற்கு தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழலும், பல்லுயிர் பெருக்க இடங்களும் அழியும் என்று இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து மாநில சுற்றுச்சூழல் தாக்கத்தின் மதிப்பீட்டு ஆணையம் இந்த திட்டத்துக்கு அனுமதி மறுத்தது.இந்நிலையில் டாடா நிறுவனம் சார்பில் மத்திய அரசிடம் புதிதாக ஒரு மனு ஜனவரி மாதம் சமர்ப்பிக்கப்பட்டது. இதை ஆய்வு செய்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தமிழக அரசிடம் ஆலோசனை கேட்காமலேயே ஆய்வக பணிகளை தொடரலாம் என அனுமதி வழங்கியது. அப்பகுதியில் சுற்று வட்டார மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்துக்கு பாதிப்பு ஏற்படாது என சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக்குழு பரிந்துரைத்தது. இதன்பேரில் நியூட்ரினோ திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டதாக சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்தது. இதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சுந்தர்ராஜன் என்பவர், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதிபதிகள் ரகுவேந்திர எஸ்.ரத்தோர், சத்தியவான் சிங் கர்ப்யால் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு விசாரணை நடத்தியது.

கடந்த மாதம் நடைபெற்ற விசாரணையின் போது, மத்திய அரசு, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் டாடா நிறுவனம் சார்பில் எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன.அனைத்து தரப்பு வாதங்களையும் ஆய்வு செய்த நீதிபதிகள், நியூட்ரினோ திட்டம் தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கினர். நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த இடைக்கால தடை விதிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர். அதேசமயம் இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதிக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர். மத்திய அரசின் சார்பில் மீண்டும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து