முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு வீடாக ஆய்வு

வெள்ளிக்கிழமை, 2 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை சென்னையில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.  சென்னை ராயப்பேட்டை பார்டர் தோட்டம் பகுதியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் வீடு வீடாக சென்று டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டு அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமினை பார்வையிட்டார். அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பொழுது, தேங்கியிருந்த கழிவு நீரை உடனடியாக அகற்றியதற்காக பொது மக்கள் நன்றி தெரிவித்தனர்.

பின்னர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பே்டடி வருமாறு :-தமிழகத்தில் பருவமழை காரணமாக காய்ச்சல் பரவுவதை முற்றிலும் தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் 1200 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து கொசு ஒழிப்பு, விழிப்புணர்வு ஏற்படுத்துதல், காய்ச்சல் கண்டறிதல், காய்ச்சல் கண்ட இடங்களில் உடனடி தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், மருத்துவ முகாம்கள் நடத்துதல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்காத வகையில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.எலிசா முறையில் டெங்கு காய்ச்சலை கண்டுபிடிக்கும் சோதனை மையங்கள் 31-ல் இருந்து 125-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டெங்கு மற்றும் அனைத்து வகையான காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகள், இரத்த அணுக்கள், பரிசோதனைக் கருவி, இரத்தக் கூறுகள் மற்றும் இரத்தம், சுய தற்காப்பு சாதனங்கள் ஆகியவை போதிய அளவில் இருப்பில் உள்ளன.

டெங்கு காய்ச்சல் என்பது ஆபத்தான கொடிய நோயோ அல்லது கொள்ளை நோயோ இல்லை. இது சூழ்நிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய ஒரு சாதாரண நோயாகும். காய்ச்சல் மற்றும் கடுமையான தொண்டைவலி போன்ற அறிகுறிகள் இருந்து 5 நாள் வரை சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் மட்டுமே அதி தீவிர சிகிச்சை தேவைப்படும். எனவே, பொதுமக்கள் காய்ச்சலுக்கான அறிகுறிகளை கண்டவுடன் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவ நிலையங்களை அணுகி உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். மருத்துவரின் பரிந்துரையின்றி எந்த மருந்தையும் தாமாகவே உட்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருந்துக் கடைகளில் பொதுமக்களுக்கு உரிய பரிந்துரையின்றி மருந்துகள் வழங்கக் கூடாது என்று மருந்து கட்டுப்பாட்டுத் துறை மூலமாக அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்திய மருத்துவ முறை பாரம்பரிய மருந்துகளான நிலவேம்பு குடிநீர் அரசு மருத்துவமனை மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படுகிறது. இயற்கையாக காய்ச்சல் குணமடைய ஊக்குவிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.இந்த ஆய்வின் பொழுது மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் ராதா கிருஷ்ணன் சென்னை மாநகராட்சி வட்டார துணை ஆணையாளர் (வடக்கு) திவ்யதர்ஷினி, பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி மற்றும் உயர்அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து