முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரபேல் ஊழல்: விசாரணை நடத்தினால் மோடி தப்ப முடியாது:ராகுல் காந்தி

சனிக்கிழமை, 3 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : ரபேல் ஒப்பந்த ஊழல் குறித்து விசாரணை நடத்தினால், நிச்சயமாக பிரதமர் மோடியால் தப்ப முடியாது என்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் ராகுல் காந்தி செய்தியாளர்களிடையே கூறியதாவது:

ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து விசாரணை நடத்தினால் மோடியால் தப்ப முடியாது. ஏனெனில் இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. அதுமட்டுமன்றி ரூ. 30, 000 கோடி மதிப்புடைய ஒப்பந்தத்தை அனில் அம்பானிக்கு தருவது குறித்து மோடிதான் முடிவெடுத்துள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது. இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லையெனில், இதுகுறித்து விசாரணை நடத்த அவரே உத்தரவிட்டிருப்பார். இதில் பிரதமரின் தலையீடு இல்லையெனில், இந்நேரம் சி.பி.ஐ. விசாரணைக்கோ, உச்ச நீதிமன்ற விசாரணைக்கோ உத்தரவிட்டிருப்பார்கள். நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இவை எதுவும் நடக்கவில்லை. இந்த விவகாரத்தில் மோடி மெளனமாக இருக்கிறார். நாம் மாட்டிக் கொள்வோம் என்கிற பயத்தில் மோடி தனது தூக்கத்தை தொலைத்து விட்டார் என்று அவர் கூறினார்.

இதனிடையே, மோடியை காப்பாற்றுவதற்காக டஸால்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ பொய் கூறுவதாக ராகுல் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், நஷ்டத்தில் இருக்கும் நிறுவனத்துடன் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொள்ள காரணம் என்ன? விமான நிலையம் அருகே இடம் தேவைப்பட்டதால்தான் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக டஸால்ட் நிறுவனத்தின் சிஇஓ தெரிவித்திருந்தார். ஆனால் அந்த நிறுவனம் அளித்த பணத்தில்தான் அனில் அம்பானி அந்த இடத்தை வாங்கியதாக தற்போது செய்திகள் வெளியாகின்றன. இதில் எது உண்மை? ரபேல் விவகாரத்தில் விசாரணை நடைபெற கூடாது என்பதற்காக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை மோடி பொறுப்பில் இருந்து விடுவித்தார். ஏனெனில் ஊழல் தொடர்பான ஆவணங்களை அலோக் வர்மா சேகரித்திருந்தார். அதுமட்டுமன்றி இந்த விவகாரத்தில் உண்மை வெளியில் வருவதை தடுப்பதற்காக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் வரை சென்றிருக்கிறார் என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து