முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிர்க்கட்சித் தலைவர்கள் பொய் உரைக்கும் இயந்திரங்கள்:பிரதமர் நரேந்திர மோடி தாக்கு

ஞாயிற்றுக்கிழமை, 4 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,எதிர்க்கட்சித் தலைவர்களை, பொய் உரைக்கும் இயந்திரங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். 
 

இதுகுறித்து டெல்லியில் இருந்தபடி 5 மக்களவைத் தொகுதிகளைச் சேர்ந்த பா.ஜ.க தொண்டர்களுடன் காணொளி காட்சியின் மூலம் கலந்துரையாடியபோது அவர் கூறியதாவது:சில எதிர்க்கட்சித் தலைவர்கள் பொய் உரைக்கும் இயந்திரங்களாகி விட்டனர். எப்போதெல்லாம் அவர்கள் பேசுகிறார்களோ, அப்போதெல்லாம் ஏ.கே. 47 ரக துப்பாக்கி சுடுவது போன்று, பொய்களை வெளியிடுகின்றனர். எனவே நாட்டு மக்களை சென்று சந்தித்து உண்மைகளை எடுத்துரைத்து, எதிர்க்கட்சியினர்தெரிவிப்பவைகள் பொய்கள் என்பதை பா.ஜ.க தொண்டர்கள் பகிரங்கப்படுத்த வேண்டும்.

பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் அமைக்கும் கூட்டணியை கண்டு கட்சித் தொண்டர்கள் கவலைப்பட தேவையில்லை. அவர்கள் தங்களது வாரிசு அரசியலை பாதுகாக்கவே கூட்டணி சேர்கின்றனர். அவர்களை நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். எதிர்மறை பணிகளுக்காகவும், நாட்டில் மேற்கொள்ளப்பட்ட நல்ல பணிகளை நிராகரித்தது மற்றும் நமது ராணுவத்தை அவமதித்தது போன்ற காரணங்களுக்காக அவர்களை மக்கள் வெறுக்கவே செய்வார்கள்.சில எதிர்க்கட்சித் தலைவர்கள், ஒரு விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கும்போது, ஒரே நாளில் பல்வேறு மாறுபட்ட புள்ளி விவரங்களை வெளியிடுகின்றனர் (ரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட புள்ளி விவரங்களை குறிப்பிட்டார்). ஆனால், நாட்டு மக்களுக்கு உண்மை தெரியும். கட்சித் தொண்டர்கள் ஒவ்வொருவரும், தலா 100 பேரை சந்தித்துப் பேசும்பட்சத்தில், அவர்களது நம்பிக்கை மேலும் அதிகரிக்கும்.

மத்தியில் இருக்கும் எனது அரசும், பல்வேறு மாநிலங்களை ஆளும் பாஜக அரசுகளும், நாட்டின் விதியை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் பணியாற்றி வருகின்றன. எதிர்க்கட்சித் தலைவர்களோ, வாரிசு அரசியல் குறித்து மட்டுமே கவலைப்படுகின்றனர். பா.ஜ.க மேலும் 5 முதல் 10 ஆண்டுகள் ஆட்சியில் நீடித்தால், 200 முதல் 500 குடும்பங்களின் நிலை என்ன ஆகும்? என நினைக்கின்றனர். இந்த குடும்பங்கள்தான், சுதந்திரத்துக்குப் பிறகு, நமது நாட்டை தங்களது கட்டுக்குள் வைத்திருந்தவர்கள்.
மத்தியில் ஆட்சியில் இருக்கும் எனது அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்த அண்மைகால தகவல்களை, எனது பெயரில் இருக்கும் செல்லிடப்பேசி செயலி (செல்போன் ஆப்) மூலம் தெரிந்து கொண்டு, பொது மக்களிடம் தொண்டர்கள் எடுத்துரைக்க வேண்டும். எனது அரசின் பணிகளையும், முந்தைய அரசின் பணிகளையும் ஒப்பிட்டு, மக்களிடம் உண்மைகளை விளக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து