முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மானாமதுரையில் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்

திங்கட்கிழமை, 5 நவம்பர் 2018      சிவகங்கை
Image Unavailable

சிவகங்கை - சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் திருக்கார்த்திகை தீபத்திருநாளில் வீடுகளில் ஏற்றப்படும் மண்ணால் செய்யப்படும் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மானாமதுரை என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது மண்பாண்டப் பொருள்கள்தான். இங்கு வழக்கம்போல் சமையல் செய்யத் தேவையான சட்டி, பானைகள், தவிர்த்து சீசனுக்கு தகுந்தவாறு அம்மன் கோயில்களில் நேர்த்திக்கடன் செலுத்த பயன்படுத்தப்படும் தீச்சட்டி, அக்கினிச்சட்டி, பொம்மைகள், குதிரை எடுப்பு விழாவுக்கான குதிரை பொம்மைகள், கோடை காலத்தில் கூஜாக்கள், நாணயங்களை சேமித்து வைக்க உண்டியல்கள், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு விநாயகர் சிலைகள் மற்றும் வீட்டு வரவேற்பறையை அலங்கரிக்கும் கலைப் பொருள்கள் என விதவிதமான பொருள்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
மானாமதுரையில் தயாரிக்கப்படும் கடத்தையே கர்நாடக இசைக்கலைஞர்கள் பெரிதும் விரும்புவதால் தமிழகம், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அதிகம் விற்பனையாகி வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் மண்பாண்டப் பொருள்கள் தரமானதாக இருப்பதற்கு இப்பகுதி கண்மாய்களில் கிடைக்கும் மண்ணின் உறுதித்தன்மையே காரணம்.
இந்நிலையில் வரும் 23 ஆம் தேதி திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படவுள்ளது. இதற்காக மானாமதுரையில் குலாலர்தெரு அருகேயுள்ள வேதியரேந்தல், பெரியகோட்டை, மேலப்பசலை, கீழப்பசலை, உடைகுளம் ஆகிய கிராமங்களில் மண்ணால் செய்யப்படும் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இங்கு கார்த்திகை விளக்கு, தேங்காய் விளக்கு, சரவிளக்கு, கூம்பு வடிவ விளக்கு, குருவாயூர் விளக்கு, இலை வடிவ விளக்கு என பலவகையான விளக்குகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. கிளியான்சட்டி என அழைக்கப்படும் கார்த்திகை விளக்குகள் எண்ணிக்கை அடிப்படையில் விற்பனை செய்யப்படுகின்றன. பிறவகை விளக்குகள் ரூ. 100-லிருந்து ரூ. 800 வரை விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது கண்மாய்களில் மண் எடுக்க கட்டுப்பாடு மற்றும் மூலப்பொருள்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் விளக்குகள் விலை அதிகரித்துள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு இன்னும் 20 நாள்களே இருப்பதால் வெளியூரிலிருந்து வியாபாரிகள் ஆர்டர் கொடுத்துள்ளதால், விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து