முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு அனுமதித்த நேரத்தை மீறி தமிழகத்தில் பட்டாசு வெடித்த 2100 பேர் மீது வழக்குப் பதிவு

புதன்கிழமை, 7 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : சுப்ரீம் கோர்ட் அனுமதித்த நேரத்தை மீறி தீபாவளி நாளில் பட்டாசு வெடித்ததாக 2100 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்...

பட்டாசு புகையினால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக மனுதாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு பல அதிரடி உத்தரவுகள் பிறப்பித்தது. 2 மணி நேரமே பட்டாசு வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிப்பதால் காற்று மாசுபடுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். திறந்த வெளிகளில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

நேரம் ஒதுக்கீடு

இந்த தீர்ப்பை அமல்படுத்தும் விதமாக தமிழக அரசு பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கீடு செய்தும் கட்டுப்பாடுகள் விதித்தும் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி காலையில் 6 மணி முதல் 7 மணி வரையும், இரவில் 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று நேரம் ஒதுக்கீடு செய்தது. இந்த உத்தரவை செயல்படுத்துமாறு மாநில போலீசாருக்கும் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து மாநகர போலீஸ் கமி‌ஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தங்கள் பகுதிகளில் பட்டாசு வெடிக்கும் நேரம், கட்டுப்பாடுகள் குறித்தும் தனித்தனியே பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இந்த உத்தரவை மீறுவோருக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை அல்லது ரூ.1000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

வழக்குப்பதிவு

ஆனால் இந்த உத்தரவை மீறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.  சென்னையில் பல பகுதிகளில் நள்ளிரவிலும், அதிகாலையிலும் தூக்கத்தை கெடுக்கும் வகையில் சிலர் பட்டாசு வெடித்தனர். பட்டாசு வெடிப்பதை கண்காணிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் வாகனங்களில் ரோந்து சென்றனர். அப்போது தடையை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சிறுவர்களும் சிக்கினர். அவர்களின் பெற்றோர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தும், எச்சரிக்கை செய்தும் அனுப்பினார்கள்.

3 பிரிவுகளில் வழக்கு...

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தல், குடியிருப்பு பகுதிகளில் பட்டாசு வெடித்தல், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் அதிக சத்தம் ஏற்படுத்தும் மற்றும் அதிக புகை வெளிப்படுத்தும் பட்டாசுகளை வெடித்ததாக இந்திய தண்டனைச் சட்டம் 288, 285 உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களுக்கு சொந்த ஜாமீன் வழங்கப்பட்டது. அவர்களுக்கு கோர்ட் மூலம் அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். அதிகபட்சமாக சென்னையில் 343 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதற்கு அடுத்தப்படியாக விழுப்புரத்தில் 255 வழக்குகள் பதிவாகி உள்ளது.

மாவட்ட வாரியாக பதிவான வழக்குகள் வருமாறு:-

சென்னை - 343, திருவள்ளூர் - 101, காஞ்சீபுரம் - 63, கோவை - 184, நாமக்கல் - 46, திருப்பூர் - 152, சேலம் - 60, திண்டுக்கல் - 11, திருவாரூர் - 31, தஞ்சை - 18, நாகப்பட்டினம் - 27, கிருஷ்ணகிரி - 34, தர்மபுரி - 25, ஈரோடு - 18, புதுக்கோட்டை - 16, கரூர் - 11, பெரம்பலூர் - 11, திருச்சி - 64, விழுப்புரம் - 255, கடலூர் - 29, நெல்லை - 90, தூத்துக்குடி - 31, வேலூர் - 64, திருவண்ணாமலை - 93, கன்னியாகுமரி - 23, மதுரை - 170, விருதுநகர் - 135, புதுவையில் மொத்தம் 35 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பின்னர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். தமிழகம் புதுவையில் மொத்தம் 2,100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து