முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணப் புழக்கத்தை முடக்குவது பணமதிப்பு நீக்கத்தின் நோக்கமல்ல மத்திய நிதியமைச்சர் ஜெட்லி விளக்கம்

வியாழக்கிழமை, 8 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,பணப்புழக்கத்தை முடக்குவது பணமதிப்பு நீக்கத்தின் நோக்கமல்ல என்று மத்திய நிதியமைச்சர் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார்.பழைய 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டு செல்லாது என பிரதமர் மோடி 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி அறிவித்தார். இந்த நிலையில் பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி நிதியமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது:-பணமதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. நமது பொருளாதாரத்தை முறையாக்குவதற்காக கொண்டு வரப்பட்ட திட்டமே பணமதிப்பு நீக்கம். வெளிநாட்டில் இருந்து கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வரவும், அதற்கு வரி விதிக்கப்பட்டு முறைப்படுத்தவும் முதல்கட்ட நடவடிக்கை அமைந்தது. இதன்படி, வெளிநாடுகளில் இந்தியர்கள் வைத்துள்ள சொத்துக்கள், பணத்தை கணக்கிட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.நேரடி வரி மற்றும் மறைமுக வரியை வசூலிக்க கணக்கு தாக்கல் செய்வதை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அதன்படி 17.42 லட்சம் வங்கி கணக்குகள் சந்தேகத்துக்குரியவையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது செல்லாது என அறிவிக்கப்பட்ட தொகை முழுவதும் ஏறக்குறைய வங்கிக்கு திரும்பி வந்து விட்டதால் இந்த திட்டம் தோற்று விட்டதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் அது தவறான கணிப்பு. பணப்புழக்கத்தை முடக்குவது பணமதிப்பு நீக்கத்தின் நோக்கமல்ல.பணமதிப்பு நீக்கத்தால் வருமான வரி வசூல் கணிசமாக உயர்ந்துள்ளது. பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட அடுத்த இரண்டு ஆண்டுகளில் வருமான வரி வசூல் முறையே 6.6 சதவீதம், 9 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. பணமதிப்பு நீக்கமும் அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஜி.எஸ்.டி. வரி விதிப்பும், வரி வருவாயை கணிசமாக உயர்த்தியுள்ளது. இவ்வாறு அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து