பணமதிப்பிழப்பு அதிர்ச்சியில் இருந்து நாட்டின் பொருளாதாரம் இன்னும் மீளவில்லை: மன்மோகன் சிங்

புது டெல்லி,கொடுமையான பணமதிப்பிழப்பு நடவடிக்கையைப் பிரதமர் மோடி கொண்டு வந்து 2 ஆண்டுகள்ஆகியும்கூட, அந்த அதிர்ச்சியில் இருந்து நாட்டின் பொருளாதாரம் இன்னும் மீளவில்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மத்திய அரசைக் கடுமையாக விளாசியுள்ளார்.கடந்த 2016-ம் ஆண்டு, நவம்பர் 8-ம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையைப் பிரதமர் மோடி கொண்டு வந்தார். நாட்டில் ரூ.15 லட்சம் கோடி மதிப்பில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவரப்பட்டு நேற்றுடன் 2-வது ஆண்டு நிறைவடைகிறது.
இது குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 2016-ம் ஆண்டு சிறிது கூட சிந்திக்காமல், விளைவுகளை ஆய்வு செய்யாமல் கொண்டு வந்த மோசமான பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் 2-ம் ஆண்டு அனுசரிக்கப்படுகிறது.பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒவ்வொரு தனிமனிதரையும் வயது, பாலினம், மதம், தொழில் எனப் பாகுபாடு பார்க்காமல் பாதித்துள்ளது. 2 ஆண்டுகள் ஆகியும்கூட, அந்த அதிர்ச்சியில் இருந்து நாட்டின் பொருளாதாரம் இன்னும் மீளவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தாக்கம் பொருளாரத்தில் கடுமையாகப் பாதித்து, வேலைவாய்ப்பிலும், நிதிச்சந்தையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பணமதிப்பிழப்புக்கு பின் நாட்டின் பொருளாதார வளர்சிச்சியிலும் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நாட்டின் தூண்களாக இருந்துவந்த சிறு, குறு தொழில்கள் பணமதிப்பிழப்பு அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை.
வேலைவாய்ப்பில் நேரடியாகத் தாக்கத்தை பணமதிப்பிழப்பு ஏற்படுத்திய காரணத்தால் இன்னும் புதியவேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்கு உருவாக்க முடியாமல் பொருளாதாரம் தொடர்ந்து தடுமாறி வருகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் முழுமையான தாக்கத்தையும், மோசமான அனுபவங்களையும் இன்னும் நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, மிகைப்பொருளாதார பாதிப்புகள், டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு குறைவு போன்றவை இப்போது தலைதூக்கி விட்டன.பொருளாதாரத்தில் முன்யோசனையின்றி மோசமான விளைவுகளை உண்டாக்கும் சாகசமுடிவுகள், தேசத்தை நீண்டகாலத்துக்கு எவ்வாறு பாதிக்கும் என்பதை நினைவு கூர்ந்து வருகிறோம். இவ்வாறு மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.