முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆட்கொல்லிப் புலியை கொன்ற விவகாரம்: அமைச்சரை பதவி நீக்க மேனகா காந்தி கடிதம்

வியாழக்கிழமை, 8 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,மகாராஷ்டிர மாநிலத்தில் 13 பேரை வேட்டையாடிய பெண் புலியை சுட்டுக் கொன்ற விவகாரத்தில், புலியை கொல்ல அனுமதி அளித்ததாக கூறப்படும் மாநில வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்யக்கோரி மத்திய அமைச்சர் மேனகா காந்தி அம்மாநில முதல்வர் பட்னவீஸிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் யவத்தமால் மாவட்டம் போரத்தி வனப்பகுதியில் 13 நபர்களின் சாவுக்கு காரணமாக கருதப்பட்ட பெண் புலியான அவ்னியை வனத்துறையின் உதவியுடன் அஸ்கர் அலி என்பவரால் கடந்த வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டது.இச்சம்பவத்திற்கு மத்திய அமைச்சர் மேனகா காந்தி தனது சுட்டுரை மூலம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.அவ்னி பெண்புலியை கொல்ல எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையிலும், மாநில வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் முங்கந்திவார் சுட்டுக்கொல்ல உத்தரவு வழங்கியது சட்ட விரோதம் எனக் கூறி அவருக்கும், துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற அஸ்கர் அலிக்கும் மேனகா காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக மாநில அமைச்சர் முங்கந்திவாரை பதவியிலிருந்து நீக்கக்கோரி மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்னவீஸிற்கு மேனகா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதம் குறித்து  மேனகா காந்தி செய்தியாளர்களிடம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:பெண் புலியை சுட்டு கொன்ற நிகழ்வு சட்ட விரோதமானது. இதற்கான அனுமதியை மாநில வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் முங்கந்திவார் முன்னின்று வழங்கியுள்ளார். விலங்குகளையும், வன உயிர்களையும் பாதுகாப்பதே வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சரின் கடமை. ஆனால் அவர் தன் கடமையிலிருந்து தவறி விட்டார்.கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆட்கொல்லி புலி குறித்து தான் அமைச்சர் முங்கந்திவாரிடம் பேசும் போது, அந்தப்புலி வாழும் சூழ்நிலையை அமைதியாகவும், தனிமைப்படுத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டேன்.அந்தப் புலியை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருந்து அவர் தவறி விட்டார். எனவே, இதற்கு பொறுப்பேற்கும் வகையில் அமைச்சர் முங்கந்திவாரை பதவியிலிருந்து முதல்வர் பட்னவீஸ் நீக்க வேண்டும். மேலும் அஸ்கர் அலி, புலியை சுட்டுக் கொல்வதற்காக நியமிக்கப்பட்டவர் அல்ல. அவர் சுட்டுக்கொன்றதும் சட்ட விரோதம்.அவ்னியுடன் 10 மாத வயதுடைய 2 புலிக்குட்டிகளும் இருந்தன. அவ்னி கொல்லப்பட்டதால் தாயின்றி அவை தவிக்கின்றன. அதற்கும் அவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து