முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கஜா புயல் பாம்பன் பகுதியில் கரையை கடப்பதால் தயார்நிலையில் மாவட்ட நிர்வாகம்- கலெக்டர் வீரராகவராவ்

திங்கட்கிழமை, 12 நவம்பர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- கஜா புயல் கரையைக் கடப்பது தொடர்பான இந்திய வானியல் துறை அறிவிப்பினை அடுத்து, மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பேரிடர் மேலாண்மைத் தொடர்பான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் தெரிவித்தாவது:- கஜா புயலானது வருகின்ற நவம்பர் 15-ஆம் தேதி அன்று கடலூர் முதல் ராமநாதபுரம் மாவட்டம் வரையிலான கடற்கரை மாவட்ட பகுதிகளில் கரையை கடக்கலாம் என இந்திய வானியல் துறை அறிவித்துள்ளது. அதனடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை தொடர்பான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் எளிதில் தண்ணீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளாக 39 பகுதிகள் கண்டறிப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக 15 மண்டல அளவிலான பாதுகாப்புக் குழுக்களும், இதர துறை அலுவலர்கள் கொண்ட குழுக்களாக 135 குழுக்களும், 429 ஊராட்சிகளில் 5,588 முதல்நிலை மீட்பு பணியாளர்களை கொண்டு  முதல்நிலை மீட்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட அவசர கால செயலாக்க மையம் 24 மணிநேரமும் விழிப்புடன் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் பேரிடர் தொடர்பான புகார்களை தெரிவித்திட ஏதுவாக 1077 கட்டணமில்லா தொலைபேசி  எண்  செயல்படுத்தப்பட்டுள்ளது. பேரிடர் ஏற்படும் பட்சத்தில் பொதுமக்களை பாதுகாப்பாக மீட்டு தங்க வைப்பதற்கு 23 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள், 32 பள்ளிகள், 2 கல்லூரிகள், 91 திருமண மண்டபங்கள் என 148 பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
 அதேபோல, புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் காற்றின் வேகம் அதிகளவில் இருக்கும் என இந்திய வானியல் துறை அறிவித்துள்ளது.  இத்தகைய சூழ்நிலையில் காற்றின் வேகம் காரணமாக மரங்கள் ஏதும் சாயும் பட்சத்தில் சாலை போக்குவரத்து பாதிக்காத வகையில் உடனடியாக சீர்செய்திட ஏதுவாக 40 எண்ணிக்கையில் உயர் மின் அழுத்த மர அறுவை இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. அதேபோல 141 ஜே.சி.பி இயந்திரங்கள், 51 பொக்லைன் இயந்திரங்கள், 34 உயர் மின்அழுத்த தண்ணீர் உருஞ்சு பம்புகள், 45ஆயிரம் மணல் மூட்டைகள் போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.  அனைத்து பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்களிலும் பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களான பால் உள்ளிட்ட உணவு பொருட்களும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மருந்து மாத்திரைகள் உள்ளிட்ட மருத்துவ வசதிகள் போன்றவை தயார் நிலையில் இருப்பதை கண்காணித்து உறுதி செய்திட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  அதேபோல மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவ கிராமங்களிலும் முன்னேச்சரிக்கை அறிவிப்புகள் வழங்கப்பட்டு மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு கடலுக்குச் செல்லாமல் பாதுகாப்புடன் இருப்பது மீன்வளத்துறை சார்ந்த அலுவலர்கள் மூலமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.   கஜா புயல் கரையைக் கடக்கும் வேலையில் காற்றின் வேகம் மிக அதிகமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி, பொதுமக்கள் பாதுகாப்பாகவும், அதேநேரத்தில் எவ்வித பீதியும் அடையத்தேவையில்லை என கேட்டுக்கொள்ளப்படுகிறது. புயலால் பாதிப்புகள் ஏதேனும்  ஏற்படும் பட்சத்தில் அதனை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனைத்து வகையிலும் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு தெரிவித்தார். கூட்டத்தில்  மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, பரமக்குடி சார் ஆட்சியர் விஷ்ணுசந்திரன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் டாக்டர்.ஆர்.சுமன், மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் கோ.குருநாதன், இணை இயக்குநர்கள் (மருத்துவம்) டாக்டர்.முல்லைக்கொடி, (வேளாண்மை) ஆர்.ஆர்.சுசிலா, (கால்நடை பராமரிப்புத் துறை) டாக்டர்.பி.முருகேசன், கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் க.முருகேசன், மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கண்ணபிரான், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) நாகேஸ்வரன் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து