தேனி மாவட்டம் சங்கராபுரம் கிராமத்தில் சிறப்பு பொருளாதார மையம் அமையவுள்ள இடத்தினை துணை முதல்வர் ஓ.பி.எஸ். ஆய்வு

திங்கட்கிழமை, 12 நவம்பர் 2018      தேனி
12 ops news

தேனி, - தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சங்கராபுரம் கிராமப்பகுதியில் சிறப்பு பொருளாதார மையம் (உணவு பூங்கா) அமைப்பதற்கான இடத்தினை நேற்று  மாவட்ட கலெக்டர் ம.பல்லவி பல்தேவ், முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்விற்குப்பின் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் செய்தியாளர் சந்திப்பின் போது,
நமது தேனி மாவட்டம் மலைகள் சூழ்ந்த மாவட்டம் என அம்மா அடிக்கடி அன்பாக அழைப்பார். இங்கு அனைத்து பகுதிகளுமே விவசாயம் சார்ந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் ஒன்று நன்செய் நிலப்பகுதிகளாகவும், மற்றொன்று புன்செய் நிலப்பகுதிகளாகவும் அமையப் பெற்றுள்ளது. நமது மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் சராசரியாக பெய்துள்ளது. நிலத்தடி நீரும் ஒரளவு கிடைக்கப்பெறுவதால் முழுமையாக விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நமது மாவட்டத்தில் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்ற பொருட்களான தென்னை, வாழை, கரும்பு, நெல் தோட்டக்கலை பயிர்களான திராட்சை போன்று பல்வேறு விவசாய பொருட்களை விவசாயிகள் சந்தைப்படுத்தும் போது வரத்து அதிகரிப்பால் அவர்களுக்கு போதிய விலை கிடைக்கப் பெறமாலும், ஏற்ற இறக்கத்துடன் விலை கிடைப்பதினாலும், விளைச்சலை காட்டிலும் உற்பத்தி செலவு அதிகமாகிறது. இதனால் விவசாயிகள் துன்பத்திற்கு ஆளாகும் சூழ்நிலை ஏற்படுகிறது.
இந்நிலையை கருத்தில் கொண்டு அம்மா தேனி மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மையம் அமைக்கப்படும் என்ற அறிவித்தார். அதனைத்தொடர்ந்து, நிலம் கையகப்படுத்தப்படும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது அதனை உறுதி செய்திடும் பொருட்டு, அதாவது உணவு பூங்கா அமைத்து விவசாயிகள் தங்களது விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கப்பெற்று பயனடையும் வகையில் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தப்பட்டு, இன்று மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த உணவு பூங்கா 500 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உணவு பூங்கா அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டவுடன் உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள பல்வேறு தொழில் முனைவோர்களுடன் கலந்தாலோசித்து பின்பு தான் திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசு பரிந்துரை செய்யப்படும். பெரியகுளம் மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய பகுதிகளைச் சார்ந்து விவசாயிகளின் கோரிக்கையான மாம்பழ கூழ் தொழிற் சாலை அமைப்பதற்கு ஏற்கனவே நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் தனியார் அல்லது குழுவாக அமைத்து வருபவர்களுக்கு மாம்பழ கூழ் தொழிற் சாலை அமைப்பதற்கு அரசு 50 சதவீத மானியத்தொகை வழங்கப்படும் என அறிக்கப்பட்டுள்ளது.
மதுரை முதல் போடிநாயக்கனூர் வரையிலான அகல இரயில் பாதை அமைக்கும் மத்திய அரசு திட்டத்தினை துரிதப்படுத்துவோம் என அம்மா அறிவித்தார். அதன்படி தற்போது மதுரை முதல் ஆண்டிபட்டி வரை பாலங்கள், சிறுபாலங்கள், தண்டவாளங்கள் சேர கூடிய இடங்களில் ஜல்லிகற்கள் சேகரிப்பு  பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிவுற்றவுடன் ஆண்டிபட்டி முதல் போடிநாயக்கனூர் வரை அமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளது. முல்லை பெரியாறு அணையிலிருந்து 18-ம் கால்வாய் நீட்டிப்பு பகுதிகளுக்கு சுத்த கங்கை ஓடையிலிருந்து கூவலிங்க ஆறு வரை நீட்டிக்கப்பட்டுள்ள கால்வாய்கள் சோதனை ஓட்டத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. திறந்து விடப்பட்ட தண்ணீர் கொட்டக்குடி ஆற்றில் கலக்கின்ற வகையில் அமையப்பெற்றுள்ளது.
இன்னும் 10 அல்லது 15 தினங்களுக்குள் நிலையான அரசாணை கிடைக்க பெற்ற பின்னர் 18-ம் கால்வாய் மற்றும் 58-ம் கால்வாய் பகுதிகளுக்கு அரசாணையின்படி நீர் திறந்து விடப்படும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முறையாக பாதுகாக்கப்பட்டு தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்து வருகிறது. வனப்பகுதிகளில் ஏற்கனவே நிலப்பட்டா வைத்திருப்பவர்கள் எவ்வித இடையூறுமின்றி தொடர்ந்து விவசாயம் செய்து வருகிறார்கள். இந்திய வன பாதுகாப்பு சட்டத்தின்படி பட்டா இல்லாதவர்கள் வனப்பகுதிகளில் விவசாயம் செய்யும் போதுதான் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள்; சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறைகளால் 1000-க்கணக்கான பணியாளர்கள் போர்கால அடிப்படையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் காய்ச்சல் ஏற்பட்டால்  ஆரம்ப நிலையில் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். சுயமாக மருந்து, மாத்திரை கடைகளில் வாங்கி உட்கொள்ளக் கூடாது. மேலும், அரசு மருத்துவ மனைகளில் போதிய மருந்து, மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வும், அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளது. இதனை பின்பற்றாதவர்களுக்கு அபாரதம் விதித்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளது என்பதனை மத்திய தொழில் நுட்ப குழுவால் பல்வேறு கட்டங்களாக ஆய்வு செய்து உறுதி செய்யப்பட்டுள்ளது. பூகம்பமே ஏற்பட்டாலும் அணைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்ற அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு மேற்கொண்டு நீதி மன்ற வழக்கில் 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கியது. அதற்கு பின்பு ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு தீர்ப்பினை செயல்படுத்தவில்லை. மீண்டும் 2011-ஆம் ஆண்டும் அம்மா  தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் உச்ச நீதிமன்ற தீர்ப்பினை மேல்முறையீடு செய்து 2013-ம் ஆண்டு 142 அடி தண்ணீரினை தேக்கி கொள்ளலாம் என்ற தீர்ப்பினை பெற்றதன் அடிப்படையில் 142 அடி தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. அதன் அருகில் உள்ள பேபி அணை, சிற்றணை ஆகியவற்றை பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு அணையின் நீர் மட்டத்தினை 152 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்ற தீர்ப்பினையும் பெற்றுத் தந்தார். அதனடிப்படையில் பேபி அணை, சிற்றணையை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள தமிழக அரசு ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்து ஜல்லிகற்கள் மற்றும் கம்பிகள், சிமிண்ட் போன்றவை வல்லகடவு வழியாக கொண்டு செல்லப்பட்டது. அச்சமயம் கேரள அரசு அணைகளை பராமரிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளை அம்மாவின் அரசு பாதுகாத்து வருகிறது.
முல்லை பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் மட்டுமே தேக்க வேண்டும் என கேரள அரசு கூறிவருகின்ற நிலையில் முல்லை பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு 2400 கனஅடி நீர் மட்டுமே வெளியேற்ற முடியும். மழைக்காலங்களில் கூடுதலாக தண்ணீர் வரும் போது எஞ்சிய தண்ணீர் பேபி அணை, சிற்றணை வழியாக இடுக்கி அணைக்குதான் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. கேரளவில் வெள்ளம் சூழ்ந்ததற்கும், முல்லை பெரியாறு அணையிலிருந்து உபரி வெளியேறியதற்கும் எவ்வித தொடர்பு இல்லை. முல்லைப் பெரியாறு அணைப் நீர்ப்பிடிப்பகுதிகள் மற்றும் பம்பை ஆற்று கரைப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கேரள மாநில அரசு தான் அகற்றிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், உத்தமபாளையம் சார் ஆட்சியர் ஆர். வைத்தியநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்தசாமி மற்றும் பலர் உடனிருந்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து