முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'கஜா புயல்' பாம்பன் - கடலூர் இடையே நாளை பிற்பகலில் கரையை கடக்கிறது: 8 மாவட்டங்களில் தயார்நிலையில் தேசிய - மாநில பேரிடர் மீட்பு குழு தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

செவ்வாய்க்கிழமை, 13 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,'கஜா புயல்' பாம்பன் - கடலூர் இடையே இன்று பிற்பகல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், அதனால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8 மாவட்டங்களில் தயார்நிலையில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

திசை மாறியது...வங்கக்கடலில் உருவான கஜா புயல் கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று முதலில் கணிக்கப்பட்டது. அதன்பின்னர் புயல் நகரும் திசையில் மாற்றம் ஏற்பட்டதால் கடலூருக்கும் - பாம்பனுக்கும் இடையில் கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி சென்னையில் இருந்து கிழக்கே 750 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகையில் இருந்து வடகிழக்கே 840 கிலோ மீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டிருந்தது. மணிக்கு 5 கிலோ மீட்டர் என குறைந்த வேகத்தில் நகர்ந்தது. அதன்பின்னர் மணிக்கு 4 கிமீ என அதன் வேகம் குறைந்தது. மேற்கு - தென்மேற்கு நோக்கி நகரும் கஜா புயல்,இன்று அதிதீவிர புயலாக வலுப்பெற்று பாம்பன் - கடலூர் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்தது.

பிற்பகல் கரைகடக்கும் ....இந்நிலையில், நேற்று பிற்பகல் சென்னையில் இருந்து 690  கிமீ தொலைவிலும் நாகையில் இருந்து 790 கிமீ தொலைவிலும் மையம் கொண்டிருந்த புயல் கஜா படிப்படியாக வேகம் எடுத்து மணிக்கு 12 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசைநோக்கி நகரத் தொடங்கியது. அதன்பின்னர், மேற்கு-தென்மேற்கு நோக்கி நகரும் புயல் பாம்பன்- கடலூர் இடையே நவம்பர் 15-ம் தேதி இன்று பிற்பகல் கரைகடக்கும் என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

மத்திய அரசு அறிவுறுத்தல்....புயல் கரை கடக்கும்போது கடலூர், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். கஜா புயலால் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் அணைகளை கண்காணிக்க வேண்டும் என்றும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர் ஆகியோருக்கு மத்திய நீர்வளத்துறை ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.இதற்கிடையே, கஜா புயல் காரணமாக சென்னைக்கு நேரடியாக பாதிப்பு எதுவும் இல்லை என்றாலும், பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாலச்சந்திரன், மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் கஜா புயல் தற்பொழுது நாகப்பட்டினத்துக்கு வடகிழக்கே 790 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

பலத்த காற்று வீசும்...இது தென்மேற்கு திசையில் நகர்ந்து, வரும் 15ம் தேதி பிற்பகலில் பாம்பன் - கடலூர் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி இன்று (நேற்று) காலை முதல் புயல் கரையை கடக்கும் வரை கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றானது மணிக்கு 80 - 90 கி.மீ. வேகத்திலும் சமயங்களில் 100 கி.மீ. வேகத்திலும் வீசக் கூடும்.

பாதிப்பு இல்லை...இந்த மாவட்டங்களில் 15ம் தேதி (இன்று) பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும். காற்று பலமாக வீசும் என்பதால் மீனவர்கள் 15ம் தேதி (இன்று) வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. சென்னையைப் பொறுத்தவரை 15, 16, 17ம் தேதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கஜா புயலால் சென்னைக்கு நேரடியாக பாதிப்பு இருக்காது. ஆனால் மழை இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பேட்டி....கஜா புயலை எதிர்கொள்வதற்காக சென்னை, கடலூர், ராமநாதபுரம், நாகை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை அனுப்பப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். ‘கஜா’ புயலினை எதிர்கொள்ள மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்,

அப்போது அவர் கூறியதாவது:- ‘கஜா’ புயல் நெருங்கி வருவதை தொடர்ந்து கடலோர மாவட்டங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கஜா புயல் 3 முறை திசை மாறி உள்ளது. தற்போதும் அதன் நகர்வை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். கடலூர் முதல் பாம்பன் வரை புயல் சேதம் அதிகம் ஏற்படும் என்பதால் சென்னை, கடலூர், ராமநாதபுரம், நாகை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் தயார் நிலையில் முன் ஏற்பாடுகளை செய்துள்ளோம்.

2559 இடங்கள் பாதிப்பு.....தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நாகையில் 3, சிதம்பரத்தில் 2, சென்னை, கடலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் தலா 1 வீதம் நிறுத்தப்பட்டுள்ளனர். கஜா புயல் தாக்குதலை சமாளிக்க கடலூருக்கு வந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர். புயலால் 2559 இடங்கள் பாதிக்கப்பட கூடும் என கண்டறியப்பட்டு உள்ளதால் அங்கு மரம் அறுக்கும் மிஷின், ஜே.சி.பி., எந்திரங்கள், மீட்பு படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரிகளில் உள்ள ஜெனரேட்டர்களை மேல்தளத்தில் வைக்கும் படியும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் முழுமையாக நிரப்பி வைக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளோம்.

கலெக்டர்கள் முடிவு...ஆக்சிஸன் சிலிண்டர், அத்தியாவசிய மருந்து பொருட்களை தேவையான அளவு இருப்பு வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மின்கம்பங்கள் சாய்ந்தால் அவற்றை சரி செய்ய தேவையான ஊழியர்களும் 1125 நீச்சல் வீரர்களும், 657 பாம்பு பிடிப்பவர்களும் தயார் நிலையில் உள்ளனர். புயலின் தாக்கத்தை பொறுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவது பற்றி கலெக்டர்கள் முடிவெடுத்து அறிவிப்பார்கள். அரசு ஊழியர்கள் விடுமுறை இன்றி பேரிடர் சமயத்தில் பணியாற்றுமாறு அறிவுறுத்தி உள்ளோம். மாநில பேரிடர் மீட்பு குழுக்கள் சென்னையில் ஒரு குழு, கடலூரில் ஒரு
குழு, நாகப்பட்டிணத்தில் இரண்டு குழுக்கள், மேலும் மத்திய பேரிடர் மீட்பு குழுக்கள் சென்னையில் ஒரு குழு,கடலூரில் ஒரு குழு,ராமநாதபுரத்தில் ஒரு குழு,சிதம்பரத்தில் இரண்டு குழுக்கள், நாகப்பட்டிணத்தில் மூன்று குழுக்களும் தயார் நிலையில் உள்ளது. மேலும் மத்திய, மாநில பேரிடர் மீட்புகுழுக்களை தங்கவைக்க 37 இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து