முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார் - பொன்விழா நினைவஞ்சல் அட்டை மற்றும் பரிசுகளையும் வழங்கினார்

புதன்கிழமை, 14 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 35 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். மேலும் இருதய அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு பரிசுகளையும் வழங்கி பொன்விழா ஆண்டு நினைவு அஞ்சல் அட்டையும் முதல்வர் வெளியிட்டார்.

தைராய்டு பரிசோதனை...

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை, எழும்பூர், குழந்தைகள் நல நிலையம் மற்றும் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் 35 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள, நவீன இருதய சிகிச்சை மையத்தின் தோரண நுழைவு வாயில், நவீன இருதய சிகிச்சை அறுவை அரங்கம் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு, சிகிச்சைக்கு வரும் குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அமர்வதற்கான நவீன ஒலி-ஒளி அரங்கம், குழந்தைகள் மரபணு மற்றும் மூலக்கூறு ஆய்வகம் மற்றும் அரிய மரபணு குறைபாடு சிகிச்சைத் துறை ஆகியவற்றை  திறந்து வைத்தார். மேலும், ஒரு கோடி ரூபாய் செலவில் பச்சிளம் குழந்தைகளுக்கான தைராய்டு பரிசோதனை திட்டத்தை தொடங்கி வைத்து, அரசு குழந்தைகள் நல மருத்துவமனையின் பொன்விழா ஆண்டுக்கான  நினைவு அஞ்சல் அட்டையையும்  வெளியிட்டார்.

பல திட்டங்கள்...

அம்மா  வழியில் செயல்படும் தமிழக அரசு, உலகத் தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சையை தமிழக மக்களுக்கு அளிக்கும் பொருட்டு, சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துதல், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் தாய்சேய் நல சேவைகளை வழங்குதல், 30 படுக்கை வசதிகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை ஒவ்வொரு வட்டாரத்திலும் துவக்குதல், தேவைக்கேற்ப புதிய ரத்த வங்கிகளை ஏற்படுத்துதல், 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவையை வலுப்படுத்துதல், 104 மருத்துவ தகவல் சேவை திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், கூடுதல் நிதி உதவியுடன் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம், அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம், அம்மா மகப்பேறு சஞ்சீவி, அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம், தாய்ப்பால் வங்கி போன்ற பல்வேறு முன்னோடித் திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

837 படுக்கைகளுடன்...

சென்னை, எழும்பூர், அரசு குழந்தைகள் நல மருத்துவமனை 1968-ம் ஆண்டு 250 படுக்கைகளுடன் தொடங்கப்பட்டு, தற்போது 837 படுக்கைகளுடன் தெற்கு ஆசியாவின் மிகப் பெரிய குழந்தைகள் மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது.  இம்மருத்துவமனையில் எம்.டி. (குழந்தைகள் நலம்), எம்.சி.எச்., டி.எம் (நியோநேடாலஜி) மற்றும் டி.சி.எச். ஆகிய மருத்துவப் படிப்புகளில் ஆண்டுதோறும் 69 மாணவர்கள் படித்து பட்டம் பெற்று வருகின்றனர்.  இந்த மருத்துவமனையில் தமிழகத்தில் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலுள்ள குழந்தைகளும் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.  ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை, இம்மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கியதோடு, 90.09 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன புற நோயாளிகள் பிரிவுக்  கட்டிடத்தை கடந்த ஆண்டு கட்டித் தந்துள்ளது.

180 குழந்தைகளுக்கு...

இந்த குழந்தைகள் நல மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் இருதயத் துறை, ஒரு முன்னோடியான துறையாக செயல்பட்டு வருகிறது.  தமிழ்நாட்டில் இருதய உள்ளூடுருவி ஆய்வகம் கொண்ட முதல் துறையும் இதுவே ஆகும்.   இம்மருத்துவமனையில்  ஆண்டுதோறும் சுமார் 12,000 குழந்தைகள் இருதய புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இருதயத் துறையில் உள்ள இரண்டு பிரிவுகளிலும் 20 படுக்கைகள் உள்ளன.  இங்கு 250-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.  இங்கு இருதய உள்ளூடுருவி ஆய்வகம் 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டு இதுவரை 180 குழந்தைகளுக்கு இருதய உள்ளூடுருவி மூலம் அறுவை சிகிச்சையின்றி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 

நவீன ஒலி-ஒளி அரங்கம்

இந்த நவீன இருதய சிகிச்சை மையத்திற்கு 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தோரண நுழைவு வாயில்; 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன இருதய சிகிச்சை அறுவை அரங்கம் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு, இம்மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சுமார் 250 நபர்கள் வரை அமர்வதற்கும், குழந்தைகளுக்கான பல்வேறு பயனுள்ள நிகழ்ச்சிகள், குழந்தைகள் கண்டு களிக்க கார்ட்டூன் படங்கள் மற்றும் நல்லொழுக்கம் பேணும் குறும்படங்கள் ஆகியவற்றை கண்டு களிக்கும் வகையிலும் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன ஒலி-ஒளி அரங்கம்; 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் மரபணு மற்றும் மூலக்கூறு ஆய்வகம் மற்றும் அரிய மரபணு குறைபாடு சிகிச்சைத் துறை என மொத்தம் 35 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குழந்தைகள் நல நிலையம் மற்றும் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை  முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

நினைவு அஞ்சல் அட்டை

மேலும், ஒரு கோடி ரூபாய் செலவில் மரபியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்ற நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க வகை செய்யும்,  பச்சிளம் குழந்தைகளுக்கான தைராய்டு பரிசோதனைத் திட்டத்தையும் துவக்கி வைத்தார். இதுமட்டுமின்றி, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை தொடங்கி 50 ஆண்டு நிறைவடைந்து 2018-ம் ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த பொன்விழா ஆண்டு நினைவு அஞ்சல் அட்டையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து