முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்குவங்க பெயரை மாற்றும் விவகாரம்: மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி கண்டனம்

வியாழக்கிழமை, 15 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா : மேற்குவங்க மாநிலத்தின் பெயரை மாற்றும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு அந்த மாநிலத்தின் முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தின் பெயரை பங்க்ளா என்று மாற்றுவது தொடர்பான தீர்மானத்தை சட்ட சபை நிறைவேற்றி, மத்திய அரசின் ஒப்புதலுக்கு மம்தா பானர்ஜி அரசு கடந்த ஜூலை மாதம் அனுப்பி வைத்தது. அதன்மீது மத்திய அரசு இன்னமும் முடிவெடுக்கவில்லை.

இந்நிலையில், மேற்குவங்க மாநிலத்தின் பெயரை மாற்றும் விவகாரத்தில் மத்திய அரசு தனது ஒப்புதலை அளிக்காமல் வேண்டுமென்று காலதாமதம் செய்வதாக மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களை தன்னிச்சையாக நாள்தோறும் மத்திய அரசு மாற்றி வருகிறது. ஆனால், மேற்குவங்கம் விவகாரத்தில் மட்டும் வேறு விதமாக மத்திய அரசு செயல்படுகிறது.

மேற்குவங்கத்தின் பெயரை மாற்றுவது தொடர்பாக முதலில் அனுப்பப்பட்ட 2 பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. இதைத் தொடர்ந்து, 3ஆவது முறையாக பங்க்ளா என்ற பெயரை மாநில அரசு அனுப்பி வைத்தது. அது மத்திய உள்துறை அமைச்சகத்திடம் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது. பங்க்ளா என்ற பெயர், அண்டை நாடான வங்கதேசத்தின் (பங்க்ளாதேஷ்) பெயரை போல இருப்பதனாலேயே, மேற்கு வங்க மாநில தீர்மானத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என்ற கருத்து நிலவுகிறது. அப்படி பார்த்தால், பஞ்சாப் மாநிலத்தின் பெயரில், பாகிஸ்தானில் ஒரு மாகாணம் இருக்கிறது.

மேற்குவங்கத்தில் அரசியல் ரீதியில் எந்த செல்வாக்கும் பா.ஜ.க.வுக்கு இல்லை. அப்படிப்பட்ட கட்சிக்கு, மேற்குவங்கத்தின் பெயரை மாற்றுவது குறித்த விவகாரத்தில் முடிவெடுக்கும் உரிமை கிடையாது. அரசியலமைப்பு சட்டம், கூட்டாட்சி தத்துவத்துக்கு உட்பட்டே, மேற்குவங்கத்தின் பெயரை மாற்றுவது தொடர்பான தீர்மானம், சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஆதலால் அந்த தீர்மானத்துக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து