முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கணிப்பாய்வு அலுவலர் டாக்டர் சந்திரமோகன் நேரில் ஆய்வு

வியாழக்கிழமை, 15 நவம்பர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- கஜா புயல் கரை கடப்பது தொடர்பாக, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பினைத் தொடர்ந்து பொதுமக்கள் பாதுகாப்பிற்காக மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் டாக்டர்.பி.சந்திரமோகன் ஆய்வு செய்து அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அப்போது மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் உடனிருந்தார். முதலாவதாக, ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் அவசரகால செயலாக்க மையத்தின் செயல்பாடு குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தார். இதன்பின்னர் டாக்டர் சந்திரமோகன் கூறியதாவது:- இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கஜா புயல் தொடர்பான அறிவிப்பின்படி, இப்புயலானது வங்கக்கடலில் சென்னைக்கு கிழக்கு - தென்கிழக்கில் 320 கி.மீ தொலைவிலும், நாகப்பட்டினத்திற்கு கிழக்கு - வடகிழக்கே 300 கி.மீ  தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கடலூர் முதல் பாம்பன் (ராமநாதபுரம்) இடையே நாகப்பட்டினத்திற்கு மிக அருகில் கரை கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு புயல் கரை கடக்கும்பொழுது கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகம் மிக அதிகமாகவும், கனமழை, மிக கனமழை போன்ற சூழ்நிலை நிலவும் எனவும், அதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருந்திட எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 அதனடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் கஜா புயல் தொடர்பான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மாவட்டத்தில் எளிதில் தண்ணீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளாக 39 பகுதிகள் கண்டறியப்பட்டு, அந்தந்த பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக வருவாய்த்துறை, ஊரக வளர்;ச்சித்துறை, முதல்நிலை மீட்புப்பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்கும் விதமாக 15 மண்டல அளவிலான பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
 கஜா புயல் கரை கடக்கும் நேரத்தில் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்வது அவசியம்.  குறிப்பாக பலத்த காற்று வீசும் நேரத்தில் வெளியிடங்களுக்கு செல்லுதல், பயணங்கள் போன்றவற்றை தவிர்த்திட வேண்டும்.  வீட்டின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை தாழிட்ட நிலையில் வைத்திட வேண்டும்.  மரத்தடியில் வாகனங்களை நிறுத்துதல், கால்நடைகளை கட்டுதல் போன்ற நிகழ்வுகளை தவிர்த்திட வேண்டும். உணவுப்பொருட்கள், மருந்து மாத்திரைகள், கயிறு, மெழுகுவர்த்தி, டார்ச்லைட் போன்ற அத்தியாவசியப் பொருட்களை கையிருப்பு வைத்திடல் வேண்டும்.  புயல் கரை கடக்கும் பொழுது காற்றின் வேகம் திடீரென்று குறையும்.  மந்த நிலைக்குப்பின்பு மீண்டும் சூரைக்காற்று பலமாக வீசும்.  எனவே புயல் கடந்து விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும்வரையில் வெளியில் செல்வதை தவிர்த்திட வேண்டும்.  மேலும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் அறிவுரைகளை தொலைக்காட்சி, வானொலி,  தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைதளம் போன்றவற்றில் தெரிந்து கொள்ளலாம்.  அதிகாரப்பூர்வமற்ற வதந்திகளை நம்ப வேண்டாம். இவ்வாறு கூறினார்.
     அதன்பின்பு மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்:- கஜா புயல் அறிவிப்பினைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்கும் விதமாக 15 மண்டல அளவிலான பாதுகாப்புக் குழுக்களும், 429 ஊராட்சிகளில் 5,500 முதல்நிலை மீட்பு பணியாளர்களை கொண்டு  முதல்நிலை மீட்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.  மேலும், மீட்புப் பணிகளுக்காக 92 உயர் மின்னழுத்த, 34 ஜெனரேட்டர்கள், 141 ஜேசிபி இயந்திரங்கள், 52 புரொக்கலைன் இயந்திரங்கள், 45000 மணல் மூட்டைகள் போன்றவை தயார் நிலையில் உள்ளன. மேலும், கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சார்ந்த 25 வீரர்கள், மாநில காவல் துறையின் சார்பாக மாநில பேரிடர் மீட்பு குழு பயிற்சி பெற்ற 80 வீரர்கள், இந்திய கடலோர காவல்படை  சார்ந்த  90 வீரர்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பாக 30 வீரர்கள், செஞ்சிலுவை சங்கம் சார்பாக மீட்புப் பணிகளில் பயிற்சி பெற்ற 50 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.  அவசர கால சூழ்நிலைக்கேற்ப இவ்வீரர்கள் அனைவரும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
 தற்போதைய நிலவரப்படி ராமேஸ்வரம் அருகேயுள்ள தனுஷ்கோடி பகுதியில் இருந்து 40 நபர்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகிலுள்ள பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து