முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உறங்காத உதயகுமார்: களத்தில் அமைச்சர்கள் கஜாவை எதிர்கொண்டு விரட்டிய தமிழக அரசு

வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : கஜா புயலுக்கு எதிராக தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. கஜா புயலை அடுத்து தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது .

கஜா புயல் நேற்று அதிகாலை நாகை - வேதாரண்யம் இடையே கரையை கடந்தது. இதனால் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது. முன்னதாக இந்த புயல் குறித்து தமிழக அரசு போர்க்கால முறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டது. தமிழகம் முழுக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வைக்கப்பட்டனர். பேரிடர் மீட்பு படையும் களமிறங்கியது. அது மட்டுமல்லாது, அமைச்சர்கள் அனைவரும் கஜாவுக்கு எதிராக மொத்தமாக களமிறங்கினார்கள்.

500-க்கும் அதிகமான மீட்பு முகாம்கள் அமைக்கப்பட்டது. படகுகள் உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டது. எரிபொருள் நிறுவனங்களுக்கு எரிபொருளை சேமித்து வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உணவு பொருட்கள் தயாராக வைக்கப்பட்டது. தமிழகம் முழுக்க மருத்துவ குழுக்கள் சென்றது. இந்த தொடர் நடவடிக்கைகள் காரணமாக தமிழகம் மிகப்பெரிய பேரிடரில் இருந்து தப்பித்துள்ளது.

இந்த மீட்பு பணிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையிலும் அதிகம் பாராட்டப்பட  வேண்டியவர் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்தான். நேற்று முன்தினம் காலை சென்னையில் சேப்பாக்கம் கட்டுப்பாட்டு அறைக்கு வந்தவர் நேற்று அதிகாலைதான் கிளம்பி சென்றுள்ளார். அதிகாலை சென்றவர், மீண்டும் 2 மணி நேரத்தில்  கட்டுப்பாட்டு அறைக்கு வந்து விட்டார். அந்த அளவிற்கு அவர் போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டார். கடந்த ஆண்டு ஓகி புயல் கன்னியாகுமரியை தாக்கிய போது அப்போது அங்கு சென்று பம்பரமாக சுழன்று நிவாரண மீட்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டவர் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார். களத்தில் இறங்கி அவர் ஆற்றிய பணியால் கன்னியாகுமரி மாவட்டம் சில நாட்களில் இயல்பு நிலைக்கு திரும்பியது.

அதேபோல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நேற்று முன்தினம் இரவு முழுக்க 108 ஆம்புலன்ஸ் சேவைகளை முடுக்கி விட்டு இருந்தார். அது மட்டுமில்லாமல் களத்தில் இறங்கி நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்களையும் அமைத்து இருந்தார். அதே போல் இன்னும் சில அமைச்சர்களும் களத்தில் இறங்கி பணியாற்றினார்கள். தமிழக அரசின் இந்த துரிதமான நடவடிக்கைக்கு மக்கள் பெரிய அளவில் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து