முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரையை கடந்தது கஜா: நாகை, திருவாரூரில் சாலைகள் துண்டிப்பு - மரங்கள் வேரோடு சாய்ந்தன - மீட்பு நிவாரண பணிகளில் அரசு தீவிரம்

வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : கஜா புயல் கரையை கடந்ததையடுத்து நாகை, திருவாரூர், வேதாரண்யம் பகுதிகள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. அங்குள்ள சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. அதனை அப்புறப்படுத்தும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 44 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

கஜா புயல் நேற்று முன்தினம் வியாழக் கிழமை தமிழக கடலோர பகுதியை தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நகரும் வேகம் அதிகரித்ததால் வியாழக் கிழமை நள்ளிரவுதான் கரையை கடக்கும் என தெரியவந்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு  11 மணியளவில் கஜா புயலின் முன்பகுதி தமிழக கடலோரத்தை தொட்டது. நள்ளிரவு 12.30 மணிக்கு புயல் ஆக்ரோஷமான வேகத்துடன் கரையை கடக்க தொடங்கியது. வேதாரண்யத்துக்கும், நாகைக்கும் இடையே  புயல் கரையை கடந்தது. புயல் முழுமையாக கரையை கடப்பதற்கு சுமார் 6 மணி நேரமாகும் என்று கணிக்கப்பட்டிருந்தது. அதற்கேற்ப கஜா புயல் வேதாரண்யம் - நாகை இடையே 12.30 மணி முதல் 2.30 மணி வரை மணிக்கு 120 கி.மீ வேகத்தில் மிக பலத்த சூறாவளி காற்றுடன் கரையை கடந்தது. புயலின் மையப் பகுதி ஒரு இடத்தை கடப்பதற்கு சுமார் 2 மணி நேரம் எடுத்துக் கொண்டது. நேற்று அதிகாலை 3 மணிக்கு புயலின் மையப் பகுதி கடலோரத்தில் இருந்து கடந்தது. புயலின் கடைசி பகுதி கரையை கடப்பதற்கு காலை 6 மணி  வரையானது. இந்த இடைப்பட்ட நேரத்தில் சூறாவளி காற்று தாக்குப்பிடிக்க முடியாதபடி இருந்தது. கஜா புயலின் சீற்றம் காரணமாக சுமார் 2 மணி நேரம் கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்கால் ஆகிய 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. கடலூர், நாகை, காரைக்கால், திருவாரூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள், தொலை தொடர்பு சாதனங்கள் சாய்ந்து விழுந்தன.

நாகை மாவட்டம் கஜா புயலால் கடும் சேதத்தை சந்தித்துள்ளது. குறிப்பாக, ரயில் நிலையம் சின்னாபின்னமானது. ரயில் நிலையத்தின் மேற்கூரை, விளம்பர பேனர்கள் சூறைக்காற்றில் சேதமடைந்தன. பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்தன மின்சாரம் அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

கஜா புயலால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நகராக வேதாரண்யம் அறிவிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யம் நகரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. நாகையில் இருந்து வேதாரண்யம் செல்லும் சாலை ஒரங்களில் இருந்த மரங்கள் அனைத்து முறிந்து விழுந்துள்ளதால் வேதாரண்யத்திற்கு செல்ல முடியாத நிலையும். அங்கு இருப்பவர்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தகவல் தொடர்பும் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதால் வேதாரண்யம் நகர மக்கள் தவித்து வருகின்றனர். சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தி அதிகாரிகள் வேதாரண்யம் நோக்கி சேதங்களை பார்வையிட்டு வருகின்றனர்.  கஜா புயல் எச்சரிக்கையொட்டி அதிகம் பாதிக்கப்படும் எனக் கருதப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 44,087 பேர் 627 பொதுக் கட்டிடங்களில் உள்ள பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கஜா புயலுக்கு 10-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. புயல் சீற்றத்தின் காரணமாக திருச்சி மற்றும் சென்னை இடையேயான விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று அதிகாலை 2.30 மணிக்கு சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், திருச்சியில் தரையிறங்க முடியாமல் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டது. இதே போன்று சென்னையில் இருந்து திருச்சிக்கு விமான நிலையத்துக்கு நேற்று காலை 7.15 மணிக்கு வந்த தனியார் விமானம், பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்ததால் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்துக்கொண்டிருந்தது. ஆனால், காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் விமானி, விமானத்தை தரையிறக்க முடியாது என கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து விமானம் மீண்டும் சென்னைக்கே திருப்பி விடப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து