முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுமக்களுக்கு நேர்ந்த அவலங்கள் சூறையாடப்பட்ட வேதாரண்யம்: கஜா புயல் கடந்த திக் திக் நிமிடங்கள்

சனிக்கிழமை, 17 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

வேதாரண்யம் : கஜா புயல் கடந்து சென்ற வேதாரண்யம் பகுதி உருக்குலைந்து பிற பகுதிகளில் இருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. 

கஜா புயல் பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்த போதிலும் வேதாரண்யம் பகுதிக்கு பெரிய அளவில் அச்சுறுத்தல் இருப்பது அப்பகுதி மக்களுக்கு தெரியவரவில்லை.

சிலர் புயல் பற்றிய அச்சுறுத்தல்களை புரளி என்றும், ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன என்றும் கூறிக் கொண்டிருந்ததால், அதன் தீவிரத்தை மக்கள் முழுவதுமாக உணரவில்லை என்றே தற்போது கடும் பாதிப்புக்குள்ளான வேதாரண்யம் மக்கள் கூறுகிறார்கள்.

புயல் அடித்து ஓய்ந்த வேதாரண்யம், முற்றிலும் சூறையாடப்பட்டு பேரமைதியோடு காணப்படுகிறது. வேதாரண்யத்தில் இருந்து கஜா புயல் கடந்து விட்டாலும், அம்மக்களின் முகத்தில் இருக்கும் பயம் இன்னும் போகவில்லை.

சாலையெங்கும் மரங்கள் வீழ்ந்து கிடக்கின்றன. கதவு ஜன்னல்கள் பெயர்த்துக் கொண்டு தொங்குகின்றன. அங்கிருக்கும் பொருட்களை சீரமைத்துக் கொண்டிருந்த மக்களிடம் கேட்டபோது, எங்கள் பகுதியில் அமைக்கப்பட்ட நிவாரண முகாம் மிகத் தொலைவில் இருந்தது. அதனால்தான் எங்களால் அங்கு செல்ல முடியவில்லை. கஜா புயல் தாக்கிய அன்று மாலையில் இருந்தே வீட்டில் மின்சாரம் இல்லை. செல்போன்கள் வாயிலாக மட்டுமே புயல் பற்றி தெரிந்து கொண்டோம். அதுவும் வீட்டுக்கு வெளியே நிற்க முடியாமல் காற்றின் வேகத்தால் வீட்டுக்குள் சென்று முடங்கினோம். கஜா தீவிரப் புயலாகக் கரையைக் கடக்கும் என்ற செய்தி இரவில்தான் தெரிய வந்தது.

சிலர் நகர்ப் பகுதிக்குச் சென்று லாட்ஜ்ஜில் அறை எடுத்துத் தங்கினார்கள். சிலர் அரசு நிவாரண முகாம்களுக்கு ஓடினார்கள். எங்குமே செல்ல வாய்ப்பில்லாதவர்கள் வீடுகளில் அடைபட்டோம்.

வீடில்லாதவர்களும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் அங்கும் இங்கும் ஓடியபோது ஏற்படுத்திய ஓலம் அச்சத்தை ஏற்படுத்தியது. 1.30 மணியளவில் கடுமையான புயல் வீசியது. அரைமணிநேரம் மரங்களின் ஓசையும், மழையின் வேகமும் மிரள வைத்தது. திடீரென ஒரு பேரமைதி ஏற்பட்டது. சிலர் புயல் ஓய்ந்துவிட்டதாக நினைத்து வீட்டை விட்டு வெளியே எட்டிப்பார்த்தனர். அது சிறிது நேரம்தான் தாக்குப்பிடித்தது. அப்போதுதான் புயலின் கண் கரையைக் கடந்துள்ளது. அதன்பிறகு மிகத் தீவிரமாகக் காற்று வீசியது. இம்முறை வீசிய காற்றின் வேகத்தால் எங்களுக்கு உயிர் பயம் ஏற்பட்டது. அதிகாலை 4 மணி வரை இடைவெளி இல்லாமல் காற்று வீசியது. ஒரே ஒரு நல்ல விஷயம் செல்போன் இயங்கியதுதான். அருகில் உள்ளவர்களிடமும், உறவினர்களிடமும் பேசி அவ்வப்போது தகவல்களை தெரிந்து கொண்டோம். கடைசி நேரத்தில்தான் தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்டது. அன்று இரவு முழுவதும் யாரும் உறங்கவேயில்லை. உறங்கியிருக்கவே முடியாது என்கிறார்கள் மிரளும் கண்களுடன்.

காலையில் வெளியே வந்த போதுதான் மரங்கள் வேறொடு சாய்ந்திருப்பதையும், மண் வீடுகள் தரைமட்டமானதையும் குடிசைகள் இருந்த தடம் தெரியாமல் போனதையும் பார்த்து அதிர்ந்தோம். செல்போன் கோபுரம் வீடு மீது விழுந்திருந்தது.

மருத்துவமனை வளாகம் முழுவதும் மரங்கள் விழுந்து உள்ளே நுழைய முடியாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது என்று தாங்கள் நேரில் பார்த்து அதிர்ந்து போனது குறித்து விவரிக்கிறார்கள் மக்கள்.

புயல் அடித்து புயலின் கண் பகுதி கரையைக் கடந்தபோது ஏற்பட்ட பேரமைதியை தாங்கள் உணர்ந்ததாகவும் அதை இப்போது நினைத்தாலும் பிரம்மிப்பாக இருப்பதாகவும் கூறுகிறார்கள் வேதாரண்யம் மக்கள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து