முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தயார் நிலையில் நடமாடும் மருத்துவக்குழுக்கள் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சனிக்கிழமை, 17 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க 296 நடமாடும் மருத்துவ குழுக்கள் அனுப்பப்பட்டு தயார்நிலையில் இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நோய் தடுப்பு நடவடிக்கை

தமிழகத்தில் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் போன்ற கடலோர மாவட்டங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின்படி மக்கள் நல்வாழ்வுத் துறையால் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் உள்ள பொதுமக்களுக்கு தேவைப்படக்கூடிய மருத்துவ சிகிச்சை அளிக்க நடமாடும் சிறப்பு மருத்துவக் குழுக்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.  சிறப்பு மருத்துவக் குழுக்கள் எண்ணிக்கை 216-லிருந்து 296 அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக 487 தங்கும் முகாம்கள்அமைக்கப்பட்டுள்ளன. இம்முகாம்களில் மொத்தம் 185 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தடையின்றி வழங்க... இம்மருத்துவ முகாம்களில் இதுவரை 43,825 நபர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் மருந்துகள், மாத்திரைகள், தடுப்பூசிகள், சிரப்பு மற்றும் சேற்றுப்புண்ணிற்கான ஆயின்மென்ட் ஆகியவை தேவையான அளவு இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொது மக்களுக்கு சிகிச்சையளிக்க தேவையான அனைத்து மருந்துகளும் போதுமான அளவு இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. தேவையான மருந்து மாத்திரைளை தங்கு தடையின்றி வழங்க ஏதுவாக தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் மருந்து கிடங்குகள் இன்றும் செயல்பட ஆணையிடப்பட்டுள்ளது.

குளோரின் சோதனை.....பொது சுகாதாரத் துறையினரால் தண்ணீர் மூலம் பரவும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட தொற்றுநோய்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் இணைந்து குடிநீரில் சரியான அளவு குளோரின் கலந்து விநியோகிக்கப்படுவதை சுகாதார ஆய்வாளர்கள் அடங்கிய குளோரின் பரிசோதனை குழுக்கள் உறுதி செய்கின்றன.  குடிநீரில் குளோரின் சோதனை செய்வதற்காக 15000 எண்ணிக்கையிலான குளோரின் அளவினை காட்டும் கிட் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயன்படுத்தும் நிலையில் குடிநீரில் குளோரின் அளவு 0.5 பி.பி.எம் அளவிற்கும், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி மற்றும் கீழ்நிலை நீர்தேக்கத் தொட்டிகளில் 2.0 பி.பி.எம் அளவிற்கும் இருப்பதை இக்குழுக்கள் உறுதி செய்யும்.

ஜெனரேட்டர் வசதி...பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் இதர அரசு மருத்துவமனைகளில் மின் விநியோகம் தடையில்லாமல் கிடைக்க ஜெனரேட்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள துணை இயக்குநர்களுக்கு (சுகாதார பணிகள்) உதவியாக பாதிக்கப்படாத மாவட்டங்களில் இருந்து துணை இயக்குநர்களும், பொது சுகாதாரத் துறையின் சென்னை அலுவலகத்தில் இருந்து இணை/கூடுதல் இயக்குநர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பொது சுகாதாரத் துறை இயக்குநர் அவர்களும் நேரடியாக சென்று பணிகளை மேற்பார்வையிடவும் தக்க ஆலோசனை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

நிலவேம்பு குடிநீர்....பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள இணை இயக்குநர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் தேவையின் அடிப்படையில் அவசர நிலையினை சமாளிக்க ஏதுவாக ரூ.5 லட்சம் வரையில் செலவு செய்திட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காலதாமதம் தவிர்க்கப்பட்டு தங்கு தடையின்றி நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை உரிய நேரத்தில் வழங்குவது உறுதி செய்யப்படும். இதுவரை 50000 நபர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. தேவையின் அடிப்படையில் இப்பணி விரிவுபடுத்தப்படும்.பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பும் வரையில் மேற்காணும் பணிகள் மக்கள் நல்வாழ்வுத்துறையால் எவ்வித தொய்வும் இல்லாமல் போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து