முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'கஜா புயல்' பாதிப்புகள் குறித்து 2 நாட்களில் முழுமையாக கணக்கெடுப்பு நடத்தி மத்திய அரசிடம் உதவி கோரப்படும் திருவாரூரில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். பேட்டி

சனிக்கிழமை, 17 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

திருவாரூர்,கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 2 நாட்களில் பாதிப்புகள் குறித்து முழுமையாக கணக்கெடுப்பு நடத்தி மத்திய அரசிடம் உதவி கேட்கப்படும் என்று திருவாரூரில் நேற்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ஆய்வுக்கூட்டம்....திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயல் பாதிப்புகள் குறித்து அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று இரவு துணை முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் காமராஜ், திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார், தங்கமணி, வேலுமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

புயலால் பாதிப்பு...கூட்டத்திற்கு பின்னர் துணை முதல்வர் பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது, கஜா புயல் பாதிப்பு என்பது நாகை திருவாரூர் தஞ்சை புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் முழுமையாகவும் திண்டுக்கல் ராமநாதபுரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஒரு பகுதியாகவும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை மன்னார்குடி கோட்டூர் மற்றும் திருவாரூர் ஒன்றியங்கள் முழுமையாகவும், வலங்கைமான் குடவாசல் நன்னிலம் நீடாமங்கலம் மற்றும் கொரடாச்சேரி ஒன்றியங்கள் ஒரு பகுதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

மருத்துவ வசதியும்... மாவட்டம் முழுவதும் மொத்தம் 53 ஆயிரத்து 234 குடிசைகளும் 12 ஆயிரம் ஓட்டு வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. 205 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 257 பேர் பாதுகாப்பாக இருந்து வருகின்றனர். இந்த மையங்களில் மருத்துவ வசதியும் செய்யப்பட்டுள்ளது. 11பேர் இறந்துள்ளனர். முதல்வரின் உத்தரவுப்படி அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைக்கப்பட்டு உயர் அதிகாரிகள் கண்காணிப்புடன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளில் மொத்தம் 6500 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மின்துறைக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.மாவட்டம் முழுவதும் 7400 மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்துள்ளன. 120 டிரான்ஸ்பார்மர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

சாலையில் மரங்கள்....33 ஆயிரத்து 537 மரங்கள் சாலைகளில் விழுந்தில் 17 ஆயிரத்து 684 மரங்கள் இதுவரையில் அகற்றப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 65 சதவீத சாலைகள் சரிசெய்யப்பட்டு போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது. கலெக்டர் மட்டுமன்றி ஐஏஎஸ் அதிகாரிகள் மணிவாசன் அமுதா பாலாஜி ஆகியோரும் பணியாற்றிவருகின்றனர் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக உயிர் சேதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள் கூட பாராட்டியுள்ளன. அவர்களுக்கு அரசின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். மாவட்டத்தில் தற்போது குடிநீர் என்பது ஜெனரேட்டர்களை கொண்டும் லாரிகள் மூலமாகவும் வழங்கப்பட்டு வருகின்றன. மின்சார பணிகள் 35 சதவீதம் நிறைவடைந்து உள்ளன. படிப்படியாக இதனை நிறைவேற்றுவதற்கு போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முழு கணக்கெடுப்பு... பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் நாளையும் (இன்று) நாளை மறுதினமும் (நாளை) ஆய்வு செய்ய உள்ள நிலையில் எந்தெந்த பகுதிகளை பார்வையிடுகிறார் என்பது குறித்து இதுவரையில் இறுதி செய்யப்படவில்லை. முதல்வரின் இந்த இரண்டு நாள் ஆய்வுக்குப் பின்னர் தலைமைச் செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மொத்தம் இதுவரையில் 3 லட்சத்து 39 ஆயிரத்து 257 பெயர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 674 ஜே.சி.பி. இயந்திரங்களும் 877 மரம் அறுக்கும் இயந்திரங்களும் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதுதவிர 195 ஆயில் இன்ஜின்கள் மற்றும் 958 ஜெனரேட்டர்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கஜா புயல் பாதிப்புகள் குறித்து 2 நாட்களில் முழுமையாக கணக்கெடுப்பு நடத்தி மத்திய அரசிடம் உதவி கேட்கப்படும். இவ்வாறு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பேட்டியின் போது அமைச்சர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து