முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெலிகாப்டர் பேர வழக்கு: இடைத்தரகரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவை பரிசீலிக்கிறது துபாய் ஐகோர்ட்

செவ்வாய்க்கிழமை, 20 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

துபாய் : ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில், இந்திய விசாரணை அமைப்புகளால் தேடப்படும் இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலை, துபையிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்துவது குறித்து பரிசீலிக்கும் உத்தரவை, அந்நாட்டின் உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இந்தியாவில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட மிக மிக முக்கியப் பிரமுகர்கள் பயணிப்பதற்காக, இத்தாலியைச் சேர்ந்த பின்மெக்கானிக்கா நிறுவனத்தின் துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ. 3,100 கோடி மதிப்பில் 12 ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு மத்திய அரசு கடந்த 2010-ல் ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்துக்காக, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் சார்பில் இந்திய தரப்புக்கு ரூ. 423 கோடி வரை லஞ்சம் அளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 2014-ல் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இந்த முறைகேடு புகார் தொடர்பாக சி.பி.ஐ-யும், அமலாக்கத் துறையும் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, ஹெலிகாப்டர் ஒப்பந்த விவகாரத்தில் 3 இடைத்தரகர்களில் ஒருவராக குற்றம்சாட்டப்படும் பிரிட்டன் தொழிலதிபர் கிறிஸ்டியன் மைக்கேலுக்கு எதிராக, சர்வதேச காவல்துறை மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க இந்தியா நடவடிக்கை மேற்கொண்டது. இதைத்தொடர்ந்து, துபையில் அவர் கைது செய்யப்பட்டார். அவரை நாடு கடத்துவது தொடர்பாக துபையிடம் மத்திய அரசு கடந்த 2017-ல் கோரிக்கை விடுத்தது.

இது தொடர்பான வழக்கில் உத்தரவு பிறப்பித்த துபாய்  கீழ்நீதிமன்றம், கிறிஸ்டியன் மைக்கேலை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பது குறித்து பரிசீலிக்க அந்நாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக, துபாய் உயர்நீதிமன்றத்தில் கிறிஸ்டியன் மைக்கேல் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், அவரது மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டதாகவும், கீழ்நீதிமன்றத்தின் உத்தரவு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், ஐக்கிய அரபு அமீரகத்தின் நீதித்துறை அமைச்சர் ஒப்புதலுக்கு பிறகுதான், கிறிஸ்டியன் மைக்கேலை நாடு கடத்துவதற்கான பரிசீலனை தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து