முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பி.சி.சி.ஐ.யிடம் ரூ.447 கோடி நஷ்டஈடு கேட்டு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

செவ்வாய்க்கிழமை, 20 நவம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : இருநாடுகளுக்கு இடையில் தொடரை நடத்த விரும்பாத பி.சி.சி.ஐ.-யிடம் 447 கோடி ரூபாய் கேட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர்ந்த வழக்கை ஐசிசி தள்ளுபடி செய்தது.

பெரிய இழப்பு

கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு உண்டு. இருநாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நடத்துவதன் மூலம் இரு கிரிக்கெட் வாரியத்திற்கும் கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கும். பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய எல்லையில் தொடர் தாக்குதல் நடத்தியதால் இந்தியா இருநாடுகளுக்கு இடையிலான தொடரில் விளையாட மறுத்துவிட்டது. இதனால் பாகிஸ்தானுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவரான நஜம் சேதி இருநாடுகளுக்கு இடையில் மீண்டும் கிரிக்கெட் தொடர் நடத்த தீவிர முயற்சி எடுத்தார். இதன் காரணமாக 2015 முதல் 2023 வரை இருநாடுகளுக்கும் இடையில் 6 தொடர் நடத்த பி.சி.சி.ஐ. - பிசிபி இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்தியா நடத்தும் தொடரை இந்தியாவிலும், பாகிஸ்தான் நடத்தும் தொடரை பொதுவான ஒரு இடத்திலும் நடத்தலாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. இதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும்போது, எல்லையில் தீவிரவாத தாக்குதல் இருக்கும்வரை கிரிக்கெட் தொடர் கிடையாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.

தள்ளுபடி செய்தது...

இதனால் வழியில்லாமல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 447 கோடி ரூபாய் பி.சி.சி.ஐ.-யிடம் நஷ்டஈடு கேட்டு ஐசிசி-யில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை ஐசிசி-யின் மூன்று பேர் கொண்ட தீர்வு கமிட்டி விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை ஐ.சி.சி. நேற்று தள்ளுபடி செய்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து