முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர்களுக்கு எதிராக போராட்டம் நடத்த ஸ்டாலின் தூண்டி விடுகிறார் - பார்லி. துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றச்சாட்டு

புதன்கிழமை, 21 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

கரூர் : அமைச்சர்களுக்கு எதிராக போராட்டம் நடத்த மு.க.ஸ்டாலின் தூண்டி விடுவதாக பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம்சாட்டியுள்ளார்.
கரூர் புலியூர் பகுதியில் நேற்று  பாராளுமன்ற துணை சபாநாயகர் மு. தம்பிதுரை பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
எப்படி உதவி கிடைக்கும்

கஜா புயலால் எந்த அளவுக்கு பாதிப்பு என்பது எல்லோருக்கும் தெரியும். அதனுடைய பாதிப்பை பற்றி அதிகமாக சொன்னால்தான் மத்திய அரசின் உதவி கிடைக்கும். அதை விடுத்து இதில் அரசியல் செய்தால் எப்படி உதவி கிடைக்கும். இது இயற்கை சீற்றம். இந்த துயர நிகழ்வை சரி செய்ய வரும் போது எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும். கஜாவால் என்னுடைய பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 3 சட்டமன்ற தொகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எல்லா இடத்திற்கும் போய் வந்து கொண்டிருக்கிறேன். மக்கள் அவர்களுக்கு நேர்ந்த பாதிப்புகளை சொல்கிறார்கள்.

குறை சொல்ல கூடாது

கேரளாவில் சமீபத்தில் பெரும் மழை வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டபோது பாராளுமன்றத்தில் எதிர்கட்சியை சேர்ந்த எந்த காங்கிரஸ் எம்.பி.க்களும் கேரள கம்யூனிஸ்டு அரசை குறை சொல்லவில்லை. அதில் அரசியல் செய்யாமல் மத்திய அரசிடம் நிதியுதவி மட்டுமே கேட்டனர். இங்கு நிவாரண பணிகள் துரிதமாக நடக்கிறது. என்ன செய்யவில்லை என்று சொல்லுங்கள். அதை விடுத்து சரியாக செய்யவில்லை என பொத்தாம் பொதுவாக குறை சொல்லக் கூடாது. கஜா புயல் நிவாரண பணிகளை தேர்தல் களமாக பார்க்கக் கூடாது.

தூண்டி விடுகிறார்

மணப்பாறை பகுதியில் நான் செல்லும் போது அதற்கு முன்பாகவே எதிர்க்கட்சிக்காரரர்கள் திட்டமிட்டு மக்களை தூண்டிவிட்டு மறியல் செய்தார்கள். இந்த அரசு செயல்படவில்லை என கூறுவதற்கு வேண்டும் என்றே எதிர்கட்சிகள் அரசியல் செய்கின்றன. இது வரலாறு காணாத பாதிப்பு. பாதிப்பை பற்றி எடுத்து சொல்லுங்கள். இல்லையெனில் மத்திய அரசு ஒன்றும் பாதிப்பு இல்லை என்று போய் விடும். மு.க.ஸ்டாலின் முதலில் பாராட்டினார். இப்போது தூண்டி விடுகிறார். பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார். நாங்கள் யாரையும் கண்டிக்கும் நிலையில் இல்லை. நாளை(இன்று) முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமரை சந்தித்து நிதி உதவி கேட்கிறார். நானும் உடன் செல்கிறேன். பெட்டிச்சாவி அவர்களிடம் உள்ளது. அவர்கள் தான் உதவ வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர்களுக்கு எதிராக யார் போராட்டத்தை தூண்டி விடுகிறார்கள் என்ற கேள்விக்கு, பிள்ளையை கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவது யார்? என கேட்டு, மீண்டும் மு.க.ஸ்டாலினை மறைமுகமாக குற்றஞ்சாட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து