முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கஜா புயல் நிவாரண பணிக்கு ரூ.1,000 கோடி விடுவிப்பு - தமிழக அரசாணை வெளியீடு

புதன்கிழமை, 21 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : 'கஜா' புயல் நிவாரணப் பணிகளுக்காக மாநில அரசு சார்பில் விடுவிக்கப்பட்ட ரூ.1000 கோடியில் வேளாண் பொருள் பாதிப்புக்கு ரூ.350 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

'கஜா' புயல் மற்றும் கனமழை காரணமாக நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு, நிவாரணப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் புயல் நிவாரணப் பணிகளுக்காக ரூ.1,000 கோடியை உடனடியாக விடுவித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். முகாமில் தங்கியுள்ளவர்களின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.5 ஆயிரமும் தென்னை மரங்களுக்கு இழப்பீடு மற்றும் மறுசாகுபடிக்காகவும் ஹெக்டேருக்கு ரூ. 2 லட்சத்து 64,600 -மும் முழுமையாக பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

அரசாணை வெளியீடு

இந்நிலையில் தமிழக அரசு சார்பில் கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளுக்காக மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக வேளாண் பொருள் பாதிப்புக்கு ரூ.350 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தென்னை, நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட விவசாய பயிர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகப் பயன்படுத்தப்படும். உயிரிழப்பு மற்றும் உடைமை சேதங்களுக்கு ரூ.205.87 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புயலால் சேதமடைந்த வீடுகள் சீரமைப்புக்கான இழப்பீடாக ரூ.100 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

உள் கட்டமைப்புக்கு....

குடிநீர், சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்புப் பணிகளுக்கு ரூ.102.5 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் புயலால் பாதிக்கப்பட்ட நெடுஞ்சாலைகளையும், சாலைகளையும் சீரமைக்க 25 கோடி ரூபாயும், நகப்புற பஞ்சாயத்துக்கு 5 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறைக்கு ரூ.10 கோடியும் மாவட்ட நிர்வாகங்களுக்கு தலா ரூ.5 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. மின் விநியோக சீரமைப்புப் பணிகளுக்காக முதற்கட்டமாக ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மீன் வளத்துறைக்கு ரூ. 41.63 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு  விவரம்:

* புயலால் சேதம் அடைந்த  வீடுகளுக்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு
 * விவசாய துறைக்கு ரூ.350 கோடி
*  மின் வினியோக சீரமைப்பு பணிகளுக்கு முதல் கட்டமாக ரூ 200 கோடி ஒதுக்கீடு
* மீன் வளத்துறைக்கு  ரூ. 41.63 கோடி ஒதுக்கீடு
* கால்நடைகள் உயிரிழப்புக்கு ரூ.205.87 கோடி  ஒதுக்கீடு
* குடி நீர்,சாலை உள்கட்டமைப்பு  பணிகளுக்கு ரூ. 102.5 கோடி ஒதுக்கீடு  செய்யப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து