முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விளக்க டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் எடப்பாடி இன்று சந்திப்பு

புதன்கிழமை, 21 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து டெல்லியில் பிரதமர் மோடியை

முதல்வர் எடப்பாடி இன்று சந்தித்து பேசுகிறார். அப்போது புயல் நிவாரணத்திற்கு தேவையான நிதியை உடனே ஒதுக்குமாறு வலியுறுத்துகிறார். மேலும், புயல் சேதப் பகுதிகளை பார்வையிட மத்தியக் குழுவை அனுப்புமாறும் அவர் கோரிக்கை விடுக்கிறார்.

டெல்லி சென்றார்

பிரதமரை சந்திப்பதற்காக நேற்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார். இன்று காலை 9.45 மணிக்கு பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார். அப்போது ‘கஜா’ புயலால் ஏற்பட்ட சேதம் மற்றும் நிவாரண பணிக்கு தேவைப்படும் நிதி குறித்து விரிவான அறிக்கையை முதல்வர் கொடுக்கிறார்.

கடும் பாதிப்பு

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உட்பட பல்வேறு மாவட்டங்கள் ‘கஜா’ புயல் தாக்கியது. இந்த கஜா புயல் 2011-ம் ஆண்டு கடலூர் மாவட்டத்தை தாக்கிய ‘தானே’ புயலைவிட 10 மடங்கு அதி தீவிரமானது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கஜா புயலால் கிட்டத்தட்ட 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. துணை மின் நிலையங்கள், டிரான்ஸ்பார்மர்கள், 4 ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு மேல் மின் கம்பிகள் என மின் துறையில் பெருத்த சேதம் ஏற்பட்டது. வாழை, தென்னை மரங்கள் பெருத்த சேதமடைந்துள்ளன. லட்சக்கணக்கான மரங்களும் சாய்ந்தன. ஏராளமானபேர் வீடுகளை இழந்தார்கள். கஜா புயலுக்கு 46 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். உயிரிழந்தவர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். காயமடைந்தவர்களுக்கு 1 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

நிவாரண பணிகள்...

புயல் பாதித்த பகுதிகளில் இரவு பகலாக நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன. 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால், மின் துறைக்கு இதனை சீர் செய்யும் பணி பெரும் சவாலாக உள்ளது. வயல்களில் மின் கம்பத்தை நட 20-க்கும் மேற்பட்டவர்கள் தூக்கி செல்லும் நிலை இருந்தது. அப்படி இருந்தும் முழு வீச்சில் மின் பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். புயல் பாதித்த பகுதிகளில் முன்னுரிமை அளித்து அரசு மருத்துவமனைகளுக்கும், சுகாதார நிலையத்துக்கும் முதலில் மின்சாரம் வழங்கப்பட்டது. அதனை அடுத்து படிப்படியாக வீடுகளுக்கும், மேல் நிலை நீர்த்தொட்டிகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.

அமைச்சர்கள் முகாம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி மாவட்டங்களில் அனைத்து அமைச்சர்களும் முகாமிட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 2, 3 அமைச்சர்கள் அங்கேயே தங்கி இரவு பகலாக நிவாரண பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு, குடிநீர் தாராளமாக கிடைக்க ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நிவாரண பணிக்களை ஒருங்கிணைக்க மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் முதல்வர் அனுப்பி் வைத்திருக்கிறார்.

முதல்வர் நேரில்...

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினார்கள். நிவாரண பணிக்கு முதல் கட்டமாக 1000 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று ஏற்கனவே முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

பிரதமரை சந்திக்கிறார்

புயல் நிவாரண பணிக்கு தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கக்கோரி, பிரதமரை சந்திக்க நேற்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் தலைமை செயலாளரும் மற்றும் அதிகாரிகளும் சென்றனர். புயல் சேத விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. நிவாரண பணிக்கு தேவைப்படும் நிதியும் தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது. இன்று காலை 9.45 மணிக்கு பிரதமரை முதல்வர் சந்திப்பார் என்று தெரிகிறது. அப்போது சேத விவரம், தேவைப்படும் நிதி பற்றி விரிவான அறிக்கையை பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடுத்து விளக்குகிறார். சந்திப்பின்போது, புயல் சேதங்களை பார்வையிட மத்திய நிபுணர் குழுவையும் அனுப்பி வைக்க வேண்டும் என்று பிரதமரிடம் அவர் வலியுறுத்துகிறார். பிரதமரை சந்தித்துவிட்டு இன்று மாலை சென்னை திரும்புவார் என்று தெரிகிறது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து