முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புயலால் தாக்கப்பட்ட தாண்டிக்குடியில் சீரமைப்பு பணிகள் விரைந்து மேற்கொள்ள மக்கள் கோரிக்கை

வியாழக்கிழமை, 22 நவம்பர் 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - கஜா புயலால் பாதிக்கப்பட்ட தாண்டிக்குடி, பெரும்பாறை உள்ளிட்ட கிராமங்களில் சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தை உலுக்கிய கஜா புயல் திண்டுக்கல் மாவட்டத்தையும் விட்டு வைக்கவில்லை. இதுவரை புயல் என்றால் என்னவென்றே அறியாத கொடைக்கானல் நகரின் பல்வேறு பகுதிகளையும் கீழ்மலை, மேல்மலை கிராமங்களையும் சூறையாடியது. இதனால் மலைக்கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் வத்தலக்குண்டு _ கொடைக்கானல் மலைச்சாலையிலும், பழனி _ கொடைக்கானல் சாலையிலும் நிலச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த சாலைகள் சீரமைப்பு செய்யப்பட்டு கடந்த 2 நாட்களாக போக்குவரத்து தொடங்கியுள்ளது. புயலுக்கு சாய்ந்த மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் அகற்றும் பணியில் ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
தாண்டிக்குடியில் பெய்த கனமழையால் 30 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட தரைப்பாலம் சேதமடைந்துள்ளது. இதனால் அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் தற்போது குறைவாக செல்வதால் விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் ஆற்றில் இறங்கி சென்று வருகின்றனர். இதே பகுதியில் சாலைகளும் பலஇடங்களில் சேதமடைந்துள்ளது. தாண்டிக்குடி, காமனூர், கே.சி.பட்டி, பெரியூர், பாச்சலூர், ஞீலத்தூர், கும்பரையூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் இல்லாததால் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகின்றன.
கீழ்மலை கிராமங்களில் மட்டும் பலஆயிரம் மரங்கள் முறிந்து விழுந்து அகற்றப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் மரங்களின் மீது ஏறியே சாலையை கடந்து வருகின்றனர். எனவே வருவாய்த்துறை அதிகாரிகளை அனுப்பி சேதமதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் கூடுதல் ஊழியர்களை நியமித்து மீட்புப்பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து