முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோட்டையில் முதல்வர் எடப்பாடியுடன் ஆலோசித்த பின் புதுக்கோட்டையில் மத்திய குழுவினர் நேரில் ஆய்வு - 27-ம் தேதிக்கு பிறகு மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல்

சனிக்கிழமை, 24 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக தமிழகம் வந்த மத்திய குழுவினர் நேற்று சென்னை கோட்டையில் முதல்வர் எடப்பாடியுடன் ஆலோசனை நடத்தினர். பின் முதலாவதாக புதுக்கோட்டையில் ஆய்வு நடத்தினர். ஆய்வு குறித்த அறிக்கை 27-ம் தேதிக்கு பிறகு மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்று மத்தியக்குழு தலைவர் டேனியல் ரிச்சர்டு தெரிவித்தார்.

தமிழகத்தில் கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக நேற்று முன்தினம் இரவு சென்னை வந்த மத்திய குழுவினர் நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஆர்.பி. உதயகுமார் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

பிரதமருடன் சந்திப்பு

கடந்த வியாழக் கிழமையன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டெல்லி சென்று அங்கு பிரதமரை சந்தித்து பேசினார். அப்போது கஜா புயல் பாதிப்புகள் குறித்து எடுத்து கூறி புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மீட்பு பணிகள் மேற்கொள்ள உடனடி நிவாரணமாக ரூ.1500 கோடியும், நிரந்தர நிவாரணமாக ரூ.15 ஆயிரம் கோடியும் வழங்க வேண்டுமென வலியுறுத்தினார். இதையடுத்து புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மத்திய குழுவை அனுப்ப வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். முதல்வரின் வேண்டுகோளை ஏற்று மத்திய குழு அனுப்பி வைக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் டானியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்திய குழு நேற்று முன்தினம் சென்னை வந்தது.

முதல்வருடன் ஆலோசனை

இந்த குழுவினர் நேற்று காலை 11 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர். மத்திய குழுவினரிடம் கஜா புயலில் ஏற்பட்ட பாதிப்பு, நிவாரண பணிகள் குறித்து மத்திய குழுவிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கினார். முதல்வருடனான சந்திப்பில் மத்திய நிதித்துறை (செலவினங்கள்) ஆலோசகர் ஆர்.பி.கவுல், மத்திய வேளாண்மைத் துறையின் கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலன் இயக்குநர் பொறுப்பு பி.கே. ஸ்ரீவத்சவா, மத்திய ஊரக வளர்ச்சித் துறை துணைச் செயலாளர் மணிக் சந்திர பண்டிட், மத்திய எரிசக்தித் துறையின் முதன்மை பொறியாளர் வந்தனா சிங்கால், மத்திய நீர்வள ஆதாரத்துறை இயக்குநர் ஹர்ஷா, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை கண்காணிப்பு பொறியாளர் ஆர்.இளவரசன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

அமைச்சர்கள் பங்கேற்பு

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி. சண்முகம், ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, வருவாய் நிர்வாக ஆணையர், கூடுதல் தலைமைச் செயலாளர் கொ. சத்யகோபால், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, பொதுப் பணித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் முகமது நசிமுத்தின், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், முதன்மைச் செயலாளர் விக்ரம் கபூர், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே.கோபால், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் டாக்டர் பி.உமாநாத், பேரிடர் மேலாண்மை ஆணையர் ராஜேந்திர ரத்னூ, செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் பொ. சங்கர், வேளாண்மைத் துறை இயக்குநர் வி. தட்சிணாமூர்த்தி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் என்.சுப்பையன், நீர்வள ஆதாரத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் எம்.பக்தவத்சலம், நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் சாந்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டையில்...

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்திய பிறகு இந்த குழுவினர் நேற்று பிற்பகல் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு சென்றனர். அங்கிருந்து அவர்கள் முதலில் புதுக்கோட்டை புறப்பட்டு சென்றனர். பிறகு நேற்று மாலை 5.30 மணிக்கு புதுக்கோட்டையில் ஆய்வு மேற்கொண்டனர். பின் மத்திய குழுவினர் நேற்று இரவு தஞ்சை சென்று அங்கு தங்கினர். இன்று காலை 7 மணி முதல் தஞ்சையிலும், மாலை 3.30 மணிக்கு திருவாரூரிலும் ஆய்வு செய்ய உள்ளனர். நாளை திங்கள் கிழமை காலை 7.30 மணிக்கு நாகை மற்றும் வேதாரண்யத்திலும், பிற்பகல் 2.30 மணிக்கு புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர்.

மத்திய அரசிடம் அறிக்கை...

முன்னதாக, முதல்வருடன் ஆலோசனைக்கு பின்னர், மத்திய குழுவின் தலைவர் டானியல் ரிச்சர்டு நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில், இன்று ஆய்வு நடத்துவதற்காக தமிழகத்திற்கு வந்திருக்கிறோம். வரும் 27-ம் தேதி எங்களது ஆய்வை முடித்து விட்டு டில்லி சென்ற பின்னர் இறுதி அறிக்கையை தாக்கல் செய்வோம் என்று அவர் தெரிவித்தார்.

மத்திய குழுவின் பயண விவரம்

* புதுக்கோட்டையில் நேற்று முதல் கட்ட ஆய்வை தொடங்குகின்றனர்.
* இன்று காலை 7 மணி முதல் 1 மணிவரை  தஞ்சையில் ஆய்வு.
* இன்றஉ மாலை 3.30  மணிக்கு திருவாரூரில் ஆய்வு.
* நாளை காலை  7 மணி முதல் நாகை மற்றும் வேதாரண்யத்தில் ஆய்வு.
* தொடர்ந்து மாலை 2.30 மணிக்கு  காரைக்கால் - புதுச்சேரி பகுதியில் ஆய்வு

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து