முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புயல் பாதித்த கிராமங்களில் சேறு, சகதியை அகற்ற தூய்மை குழுக்களை அமைக்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு

சனிக்கிழமை, 24 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் தூய்மைப் பணி மேற்கொள்ள பிற மாவட்டங்களில் ஊரக வளர்ச்சித்துறையின் உதவி இயக்குனர்கள் தலைமையிலான தூய்மைக் குழுக்களை அமைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

முன்னெச்சரிக்கை...

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

கஜா புயல் கடந்த 16.11.2018 அன்று நாகப்பட்டினம் அருகே கரையைக் கடந்து கடலோர மாவட்டங்களில் பெருத்த சேதத்தினை உண்டாக்கியது. தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையினால் உயிர்ச்சேதங்கள் பெருமளவில் குறைக்கப்பட்டது. இருந்த போதிலும், புயலின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் படகுகள், மரங்கள், பயிர்கள், குடிநீர் மற்றும் மின்சாரக் கட்டமைப்புகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. மின்சாரக் கட்டமைப்புகள் 24,941 பணியாளர்களைக் கொண்டு போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருகிறது. விழுந்த மரங்களை அகற்றும் பணிகள் தொய்வின்றி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தூய்மைக் குழுக்கள்...

பொதுமக்களின் சுகாதாரத்தை பேணுவதற்காக சிறப்பு மருத்துவக் குழுக்கள் முகாமிட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், புயல் மற்றும் மழையின் காரணமாக ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் சேர்ந்துள்ள குப்பைகள், மழை வெள்ளம் மற்றும் கடல்நீர் உட்புகுந்ததால் உண்டான சேர், சகதி இவற்றினை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை மேலும் துரிதப்படுத்தும் பொருட்டு, பிற மாவட்டங்களிலிருந்து ஊரக வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர்கள் தலைமையில் தூய்மைக் குழுக்களை அமைக்க உத்தரவிட்டுள்ளேன். இக்குழு, பாதிக்கப்பட்ட கிராமங்கள் வாரியாக, தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவும், ஒவ்வொரு குழுவிலும் 200 தூய்மைப் பணியாளர்களை பிற மாவட்டங்களிலிருந்து அழைத்துச் செல்லவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

ஆட்சியர்கள் ஏற்பாடு...

இக்குழுக்களானது, தூய்மைப் பணியாளர்கள், லாரிகள், மின்சார மரவெட்டி, மண்வெட்டி, உரிய சாதனங்கள் மற்றும் தொழிலாளர் பாதுகாப்புச் சாதனங்களுடன் பாதிக்கப்பட்டபகுதிகளுக்குச் சென்று முகாமிட்டு, குப்பைகள் மற்றும் தேங்கிக் கிடக்கும் சேர், சகதி போன்றவற்றினை துரிதமாக அகற்றும் பணியில் ஈடுபட வேண்டும். இவர்களுக்கான உணவு மற்றும் இருப்பிட வசதிகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளேன். அரசு, பேரிடர் காலங்களில் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு, பொதுமக்களின் உடமை மற்றும் வாழ்வாதாரத்தை எப்போதும் காக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து