முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கஜா புயலால் சேதமடைந்த தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் மத்திய குழுவினர் நேரில் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 25 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

தஞ்சை : கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் மத்திய குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். இந்த கஜா புயலை டெல்டா மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தைரியமாக எதிர்கொண்டிருக்கிறார்கள் என்று  ஆய்வுக் குழு தலைவரான மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தெரிவித்தார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை, நேரடியாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள, மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்ட், மத்திய நித்துறை ஆலோசகர் ஆர்.பி. கவுல்,  வேளாண்மை கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை இயக்குநர் (பொ) பி.கே.ஸ்ரீவஸதவா, மத்திய ஊரக வளர்ச்சித்துறை துணை செயலாளர் மானிக் சந்திரா பண்டிட், மத்திய எரிசக்தி துறை தலைமை பொறியாளர் வந்தனா சிங்காள், நீர்வளத்துறை இயக்குநர் ஜே.ஹர்ஷா, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் இளவரசன் ஆகியோரை கொண்ட மத்திய குழுவினர், கூடுதல் தலைமை செயலாளர்  மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்தியகோபால், மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் முன்னிலையில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்திற்குட்பட்ட, புதூர் கிராமத்தில், கஜா புயலால் சேதமடைந்த ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான வீட்டினை மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்து சேத விவரம்  குறித்து கேட்டறிந்தனர். மேலும், அப்பகுதி மக்களிடம் கால்நடைகள் சேதம்  மற்றும் நெற்பயிர்களின் சேத விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து,  ஒரத்தநாடு வட்டத்திற்குட்பட்ட, புலவன்காடு கிராமத்தில், விவசாயி நாகராஜன் என்பவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் புயலினால் முற்றிலும் அழிந்து போன தென்னந்தோப்பினை மத்திய குழுவினர் பார்வையிட்டு சேதம் குறித்து கேட்டறிந்தனர். ஒரத்தநாடு புதூர் கிராமத்திற்கு மத்திய குழுவினர் சென்று ஆய்வு செய்த போது அவர்களிடம் கிராம மக்கள் கண்ணீர் மல்க புயலால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அப்போது சில பெண்கள் திடீரென அதிகாரிகள் காலில் விழுந்து கண்ணீர் விட்டு அழுதனர். சேத விவரங்களையும் கண்ணீர் மல்க விவசாயிகள் மத்திய குழுவிடம் தெரிவித்தனர்.

பின்னர், ஒரத்தநாடு வட்டத்திற்குட்பட்ட, நெம்மேலி திப்பியக்குடி கிராமத்தில் துணை மின்நிலையங்கள் வழியாக 175 கிராமங்கள் பயனடையும் பிரதான  230/110 கே.வி. திறன் கொண்ட, கஜா புயலால் சேதமடைந்த துணை மின் நிலையத்தை மத்திய  குழுவினர் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். மேலும், பட்டுக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட, புதுக்கோட்டை உளுர் கிராமத்தில், 282 ஹெக்டேர் தென்னை சாகுபடி சேதமடைந்துள்ளது. அப்பகுதியில்  கடந்த 45 ஆண்டுகளாக தென்னை பயிர் சாகுபடி செய்து வரும் மன்சூர் என்பவருக்கு சொந்தமான 5 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்த தென்னை மரங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளதை பார்வையிட்ட மத்திய குழுவினர், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மொத்த பணப் பயிர்களின் சேதம் குறித்து கேட்டறிந்தனர்.

அதனைத் தொடர்ந்து, மல்லிப்பட்டினம் கடலோர கிராமத்தில், மீன்பிடி துறைமுகம், மீனவர் குடியிருப்பு, ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்த மத்திய குழுவினர் சேதம் குறித்து அப்பகுதியிலுள்ள மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்தனர். மேலும், 246 விசை படகுகள், 832 என்ஜின் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகள், 147 கட்டுமர படகுகள், 1,428 மீன்பிடி வலைகள், 1440 இஞ்சின்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதை மத்திய குழுவினர் பார்வையிட்டு, அவற்றின் சேத விவரம் குறித்து மீன்வளத்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.         

முன்னதாக தஞ்சாவூர் தனியார் விடுதியில் தங்கியிருந்த மத்தியக் குழுவினருக்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை புயலால் சேதமடைந்த வீடு, பயிர்கள், தென்னை, மின் மாற்றிகள், கால்நடைகள் குறித்த புகைப்படக் விளக்க காட்சி மற்றும் புயல் பாதிப்பு குறித்த புள்ளி விபரங்களை விளக்கி கூறினார்.

இதையடுத்து தஞ்சையில் இருந்து மாலையில் புறப்பட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு வெள்ள சேத பகுதிகளை பார்வையிட மத்திய குழுவினர் சென்றனர். அங்கு புயல் சேத பகுதிகளை பார்வையிட்டு விட்டு இரவு 8 மணியளவில் திருவாரூரில் இருந்து நாகை புறப்பட்டு சென்றனர். இரவு நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கிய மத்திய குழுவினர் இன்று காலை நாகப்பட்டினம் மாவட்டத்தில் புயல் சேத பகுதிகளை பார்வையிட உள்ளனர். இதையடுத்து பிற்பகல் 2.30 மணிக்கு காரைக்கால் மாவட்டத்தில் புயல் சேத பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து விட்டு இரவு புதுச்சேரி செல்கின்றனர்.  முன்னதாக டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் தென்னை மரங்கள் அதிகம் சேதமடைந்துள்ளதாக மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து