Idhayam Matrimony

மிதாலிராஜ் நீக்கப்பட்ட விவகாரம்: விசாரணை நடத்த பி.சி.சி.ஐ. முடிவு

திங்கட்கிழமை, 26 நவம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

மும்பை : மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில், முக்கியமான அரையிறுதி ஆட்டத்தில் மிதாலிராஜ் நீக்கப்பட்டது குறித்த சர்ச்சை தொடர்பாக விசாரணை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

அணியின் நலனுக்காகவே...

மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டி இங்கிலாந்து அணியுடனான அரையிறுதி போட்டி, ஆன்டிகுவாவில் நடந்தது. இதில் இந்திய அணி தோல்வியை தழுவி உலகக் கோப்பை போட்டியில் இருந்து வெளியேறியது. முக்கியமான இந்தப் போட்டியில், இந்த தொடரில் இரண்டு அரை சதம் விளாசிய மிதாலிராஜ் சேர்க்கப்படவில்லை. இது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. காயத்தில் இருந்து குணம் அடைந்த பின்னும் அவர் சேர்க்கப் படாதது ஏன் என்று கிரிக்கெட் வர்ணனையாளர்கள் நாசர் ஹூசைனும், சஞ்சய் மஞ்சரேக்கரும் இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரிடம் கேட்டனர். அவர் கூறும்போது, ’ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றோம். அந்த கூட்டணியை மாற்ற வேண்டாம் என்று முடிவு செய்ததால் மிதாலி ராஜ்-க்கு இடம் கிடைக்கவில்லை. எந்த முடிவும் அணியின் நலனுக்காகவே எடுக்கப் பட்டது. இதில் வருத்தப்பட எதுவும் இல்லை’ என்று தெரிவித்திருந்தார்.

மானேஜர் குற்றச்சாட்டு

இதையடுத்து மிதாலி ராஜின் மானேஜர் அனிஷா குப்தா, ஹர்மன்பிரீத் கவுரை கடுமையாக விளாசினார். ‘கவுர், சூழ்ச்சியாக செயல் படுகிறார். அவர் பொய் சொல்கிறார். முதிர்ச்சியற்றவர், கேப்டனாக இருக்க தகுதியில்லாதவர்’ என்று ட்விட்டரில் கடுமையாகத் தெரிவித்திருந்தார். இது சர்ச்சையை கிளப்பிய சிறிது நேரத்திலேயே அந்த ட்விட்டை நீக்கிவிட்டார் குப்தா. இதையடுத்து மகளிர் கிரிக்கெட் அணிக்குள்ளும் அரசியல் புகுந்துள்ளது தெரிய வந்திருக்கிறது.

விசாரணை நடத்த முடிவு

இந்நிலையில் இதுபற்றி விளக்கம் அளிக்க மிதாலிராஜ், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், பயிற்சியாளர் ரமேஷ் பவார், மானேஜர் திருப்தி பட்டாச் சார்யா ஆகியோருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சம்மன் அனுப்ப இருக்கிறது. இவர்கள் அனைவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகக் கமிட்டி தலைவர் வினோத் ராய் கூறும்போது, ‘வீராங்கனைகளின் மானேஜர்கள் வெறுப்பூட்டும் கருத்துகளை தேவையில்லாமல் தெரிவிக்கக் கூடாது. அணியில் உள்ள அனைவரும் கண்ணியத்தை காக்க வேண்டும் ’ என்று தெரிவித்துள்ளார்.

தனித்தனியாக சந்தித்து...

இந்நிலையில், மிதாலி ராஜ், ஹர்மன்பிரீத் கௌர் மற்றும் அணி மேலாளர் த்ருப்தி பட்டாச்சார்யா ஆகியோர் பிசிசிஐ தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரி மற்றும் பொது மேலாளர் சபா கரிம் ஆகியோரை நேற்று தனித்தனியாக சந்தித்தனர். இதுதொடர்பாக, பிசிசிஐ சி.இ.ஓ. ராகுல் ஜோஹ்ரி கூறுகையில், "மிதாலி ராஜ், ஹர்மன்பிரீத் கௌர் மற்றும் த்ருப்தி பட்டாச்சார்யாவை நாங்கள் சந்தித்தோம். அவர்களது தனிப்பட்ட பார்வையை கேட்பதற்காக அவர்களை தனித்தனியாக சந்தித்தோம். நாங்கள் அனைத்தையும் குறிப்பிட்டு வைத்திருக்கிறோம். இந்த சந்திப்பின்போது நடைபெற்ற ஆலோசனை குறித்து என்னிடம் கேட்க வேண்டாம்" என்றார்.

இந்த விவகாரம் தொடர்பான விரிவான அறிக்கையை இவர்கள் நிர்வாகக் குழுவிடம் சமர்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில், நிர்வாகக் குழு ஆராய்ந்து, தேவைப்பட்டால் அவர்களிடம் தனித்தனியாக பேசுவார்கள் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து